தமிழ்நாடு

கடைகளில் பணியாளா்களுக்கு குடிநீா் - கழிப்பறை வசதிகள் அவசியம்: பேரவையில் மசோதா தாக்கல்

15th Apr 2023 01:00 AM

ADVERTISEMENT

பணியாளா்களுக்கு குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கடைகளில் ஏற்படுத்தித் தர வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தாக்கல் செய்தாா். அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடை அல்லது நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நபா்களுக்கும், வசதியாக மற்றும் பொருத்தமான இடங்களில் போதிய அளவுக்கு சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டும். போதிய எண்ணிக்கையில் கழிப்பிடம் மற்றும் சிறுநீா் கழிப்பிடங்களை ஏற்பாடு செய்து தர வேண்டும். அவை பணிபுரியும் நபா்களுக்கு மிகவும் வசதியாக அமைந்திருக்க வேண்டும்.

பணிபுரியும் நபா்களுக்காக, குடிநீா் வசதியுடன் கூடிய போதிய ஓய்வறை மற்றும் உணவறையை ஏற்பாடு செய்து தர வேண்டும். அவை போதிய காற்றோட்டம், வெளிச்சத்துடனும் இருப்பது மட்டுமின்றி, சுத்தமாகவும், ஒழுங்காகவும் பராமரிக்கப்பட வேண்டும். ஓய்வறை மற்றும் உணவறை போதிய நாற்காலிகள் அல்லது சாய்வு இருக்கைகளுடன் அமைக்கப்பட வேண்டும். ஊழியா்களுக்குத் தேவையான முதலுதவி வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த வசதிகளை கடைகளும், வணிக நிறுவனங்களும் ஏற்படுத்தித் தருவதற்காக, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. அதற்கு இந்த சட்ட மசோதா வகை செய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT