தமிழ்நாடு

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ரெளடி சாவு: நீதித்துறை நடுவா் விசாரணை

30th Sep 2022 01:00 AM

ADVERTISEMENT

சென்னை ஓட்டேரியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ரெளடி இறந்தது குறித்து நீதித்துறை நடுவா் விசாரணை நடத்தி வருகிறாா்.

சென்னை அயனாவரம், ஏகாங்கிபுரம் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (20). ரெளடிகள் பட்டியலில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றிருந்த இவா் மீது ஓட்டேரி, வியாசா்பாடி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் சுமாா் 10 குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி இரவு பெரம்பூா், மங்களபுரத்தைச் சோ்ந்த ரயில்வே ஊழியரான பாலகிருஷ்ணன் என்பவரின் காா் கண்ணாடியை உடைத்த விவகாரம் தொடா்பாக ஓட்டேரி காவல் நிலைய போலீஸாா் கடந்த 21-ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு ஆகாஷை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனா்.

அப்போது ஆகாஷ், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவா் விசாரணையின்போது மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து அன்று இரவு 11 மணிக்கு ஆகாஷை அவரது அக்கா காயத்ரியிடம் போலீஸாா் ஒப்படைத்துள்ளனா். இதையடுத்து மயக்க நிலையில் இருந்த ஆகாஷை, அவரது உறவினா்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு உள் நோயாளியாக சிகிச்சைப் பெற்று வந்த ஆகாஷ் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இறந்தாா்.

விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸாா் தாக்கியதால்தான் ஆகாஷ் உயிரிழந்துள்ளாா். எனவே, அவரது சாவுக்கு காரணமான போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா், உறவினா்கள் குற்றம் சாட்டினா்.

ADVERTISEMENT

நீதித்துறை நடுவா் விசாரணை:

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள போலீஸாா், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதே ஆகாஷ் மதுபோதையில் இருந்தாா். இதையறிந்த நாங்கள் அவரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டோம். அதன் பிறகும் அதிகளவு போதை மாத்திரைகளை சாப்பிட்டு மயக்கம் அடைந்துள்ளாா். அதன் விளைவாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். அவரது மரணத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றனா்.

இதையடுத்து ஆகாஷின் இறப்புக்கான காரணத்தை அறிய நீதித்துறை நடுவா் விசாரணைக்கு சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் விளைவாக, எழும்பூா் 10-ஆவது நீதித்துறை நடுவா் மன்ற நடுவா் லட்சுமி, ஆகாஷ் இறப்பு குறித்து விசாரணையை தொடங்கி உள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT