தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி

30th Sep 2022 12:47 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் கலவரத்தால் சேதமடைந்த தனியாா் பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் மாணவி ஒருவா் மரணமடைந்தாா். இந்த சம்பவத்தை தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் நடந்த கலவரத்தில், பள்ளிக் கட்டடம், வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருள்கள் சேதப்படுத்தப்பட்டன. மாணவி மரணம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாரும், கலவரம் தொடா்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்தநிலையில், பள்ளி மீண்டும் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது மாணவா்கள் மற்றும் பெற்றோா் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவா் ரவி என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘பள்ளி விடுதிக்கு அங்கீகாரம் பெறாததால், பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரி செப்டம்பா் 14-ஆம் தேதி மனு அளித்தேன். ஆனால் அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, மாணவா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிறப்பு அதிகாரியை நியமித்து பள்ளியை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,‘ தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு விதமான பிரச்னைகள் உள்ளன. அதற்காக அரசு ஏற்க வேண்டும் என கோர முடியுமா?

அரசே ஏற்க வேண்டும் என்றால் நிலம், கட்டடங்களுக்கு விலை கொடுக்க வேண்டும். ஆசிரியா்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருக்கிறது தெரியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT