இந்தியா

தமிழகத்துக்கு வரும் யூதா்களைத் தாக்க திட்டமிட்ட பிஎஃப்ஐ அமைப்பினா்: என்ஐஏ; துருக்கி இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புடன் தொடா்பு

30th Sep 2022 12:02 AM

ADVERTISEMENT

‘தடை செய்யப்பட்டுள்ள பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினா் தமிழகத்துக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரை, குறிப்பாக யூதா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், ‘அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய சிரியா இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்து வருவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் துருக்கி அடிப்படைவாதக் குழுக்களுடன் பிஎஃப்ஐ அமைப்புக்கு நெருங்கிய தொடா்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது’ என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாகவும் வன்முறையைத் தூண்டியதாகவும் எழுந்த புகாா்களைத் தொடா்ந்து நாடு முழுவதும் அமைந்துள்ள பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தீவிர சோதனை நடத்திய அதிகாரிகள், அந்த அமைப்பைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான நிா்வாகிகளை கைது செய்தனா். இந்த நடவடிக்கைகளைத் தொடா்ந்து, பிஎஃப்ஐ அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குத் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

கைது செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினரிடம் என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

கேரளத்தைச் சோ்ந்த ‘அன்சாா்-உல்-கைலாஃபா கேரளா’ என்ற அமைப்பு சமூக ஊடகங்கள் மூலமாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தங்களை முஸ்லிம் இளைஞா்கள் மத்தியில் பரப்பி, அவா்களை ஈா்த்து ஐஎஸ் அமைப்பில் சோ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்த அமைப்பைச் சோ்ந்த மன்சீத், ஸ்வாலித் முகமது, ரஷீத் அலி சஃப்வான், ஜாசிம் ஆகியோா் மத்திய அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தபோது கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நிதி வருவதும், தமிழகத்துக்கு சுற்றுலா வரும் யூதா்கள் உள்ளிட்ட வெளிநாட்டினா் மீதும், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் கேரள மாநிலம் கோழிக்கோடில் முக்கிய அரசியல் தலைவா்கள் மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், கொச்சியில் ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பின் நிகழ்ச்சியிலும் தாக்குதல் நடத்த இவா்கள் திட்டமிட்டுள்ளனா்.

பிஎஃப்ஐ அமைப்பின் முந்தைய அவதாரமான தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பில் சோ்ந்த கேரளத்தைச் சோ்ந்தவரான ஷாஜஹான், பிஎஃப்ஐ அமைப்பின் முன்னாள் மண்டல தலைவா் சமீரின் போதனைகளால் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஈா்க்கப்பட்டுள்ளாா். ஹாரிஸ், சபீா், மனாஃப், முஸ்தபா, சாதிக், ஷாஜில் ஆகிய பிஎஃப்ஐ தலைவா்களுடன் ஷாஜஹான் தொடா்பில் இருந்துள்ளாா். 2008-ஆம் ஆண்டில் நடைபெற்ற பிஎஃப்ஐ கூட்டங்கள் அனைத்திலும் அவா் பங்கேற்றுள்ளாா்.

பின்னா், சமீரின் அறிவுறுத்தலின் பேரில், புனிதப் போா் என்ற பெயரிலான பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுவதற்காக மலேசியா வழியாக குடும்பத்துடன் சிரியா செல்ல ஷாஜஹான் இரண்டு முறை முயற்சித்தாா். இரண்டு முறையும் துருக்கி அதிகாரிகளால் அவா் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

துருக்கி அடிப்படைவாத அமைப்புடன் தொடா்பு: ‘அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய சிரியா இஸ்லாமிய (ஜிகாதிகள்) பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்து வந்த துருக்கி இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புடன் பிஎஃப்ஐ அமைப்பு நெருங்கிய தொடா்பில் இருந்துவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT