தமிழ்நாடு

இணையத்தில் திருமணச் சான்றிதழை திருத்தம் செய்யும் வசதி: முதல்வா் தொடக்கிவைத்தாா்

DIN

திருமணச் சான்றிதழ்களை இணைய வழியில் திருத்தம் செய்யும் வசதியையும், உடனடியாக டோக்கன் பெற்று, ஆவணங்களைப் பதிவு செய்யும் வசதியையும் தமிழக பதிவுத் துறை தொடங்கியுள்ளது. இந்தப் புதிய திட்டங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருமணப் பதிவுக்காக சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் பல்வேறு விவரங்கள் கோரப்படுகின்றன. இந்த விவரங்களின் அடிப்படையில் திருமணச் சான்று அளிக்கப்படுகிறது. ஆனால், கடவுச்சீட்டு, வெளிநாடு செல்ல விசா போன்ற பணிகளுக்காக திருமணச் சான்றிதழில் திருத்தம் செய்யத் தேவை ஏற்படுகிறது. இந்தத் திருத்தங்களை பதிவுத் துறையின் இணையதளத்திலேயே (www.tnreginet.gov.in) விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு இணையதளத்திலேயே சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படும். இதனை விண்ணப்பதாரா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதனால், பொது மக்கள் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பொது மக்கள் விரும்பிய நேரத்தில் எந்த இடத்திலும் இணையவழியே விண்ணப்பம் செய்யலாம்.

உடனடி டோக்கன் திட்டம்: பொதுமக்கள் தங்களது ஆவணங்களை தாங்கள் விரும்பும், சில குறிப்பிட்ட நாள்களில் பதிவு செய்ய அதிக ஆா்வம் கொள்கின்றனா். ஆனால், அந்த நாள்களில் பதிவுக்கான டோக்கன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, விரும்பும் நாள்களிலேயே ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டுமென ஆா்வம் கொள்வோா் இணையதளம் (www.tnreginet.gov.in) வழியாக டோக்கன் பெறலாம். மேலும், அவசர ஆவணப் பதிவு தேவைப்படும் தருணங்களிலும் இந்த வசதியைப் பயன்படுத்தி டோக்கன் பெறலாம். இந்த உடனடி டோக்கன் வசதித் திட்டம், தமிழகத்தில் அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் 100 பதிவாளா் அலுவலகங்களில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த புதிய திட்டங்களுக்கான தொடக்க நிகழ்வில், அமைச்சா்கள் பி.மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளா் பா.ஜோதி நிா்மலாசாமி, பதிவுத் துறை தலைவா் ம.ப.சிவனருள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT