தமிழ்நாடு

காவல்துறையைக் கண்டித்து மணப்பாறை வட்டாட்சியரகத்தில் தர்னா

29th Sep 2022 03:28 PM

ADVERTISEMENT

 

மணப்பாறை அருகே பணம் செலுத்தியவர்களுக்கு முறையான பட்டுவாடா செய்யாமல் தலைமறைவான உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காவல்துறையைக் கண்டித்து வாடிக்கையாளர்கள் வட்டாட்சியரகம் முன்பு குடும்ப அட்டையை  ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் செயல்பட்டு வந்த ஓம் ஸ்ரீ செந்தில் கணேஷ் சிட்ஸ் நிறுவனத்தில் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள், கூலித் தொழிலாளர்கள் அன்றாடம் தங்களது வருவாயிலிருந்து சிறுசிறு தொகையாக செலுத்தி சிட் கட்டி வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுவனத்தின் உரிமையாளர்களான தேக்கமலை, தீனதயாளன் ஆகியோர் பணம் செலுத்தியவர்களுக்கு முறையான பட்டுவாடா செய்யாமல் தலைமறைவாகியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பல கட்டப் போராட்டத்திற்குப் பிறகு வையம்பட்டி காவல்நிலையத்தில் புகார் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், சிட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும் காவல்துறையினர் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், இன்று காலை நடவடிக்கை மேற்கொள்ளாத காவல்துறையைக் கண்டித்து மணப்பாறை வருவாய் வட்டாட்சியரகம் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். தங்களது குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வட்டாட்சியர் கீதாராணி மற்றும் போலீஸார் போராட்டக்காரர்களை சமரசம் செய்து அதிகாரிகளை வரவழைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT