தமிழ்நாடு

திமுக துணை பொதுச் செயலர் பதவி: மோதும் மூன்று முகங்கள்!

29th Sep 2022 03:07 AM |  பீ.ஜெபலின் ஜான்

ADVERTISEMENT

திமுக துணைப் பொதுச் செயலர் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால் உருவான காலியிடத்துக்கு அந்தக் கட்சியின் முக்கிய மூன்று முகங்கள் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.
 திராவிட இயக்க தீவிர கொள்கைப் பற்றாளர், திமுகவின் மூத்த பெண் ஆளுமை, கொங்கு மண்டல திமுக முகம் என அரசியல் களத்தில் அறியப்பட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீரென கட்சிப் பதவியிலிருந்து விலகியதுடன், அரசியலுக்கும் முழுக்குப் போட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தின. திமுகவின் மூத்த முன்னோடியான முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரனின் தீவிர ஆதரவாளராக இருந்து அரசியலுக்குள் நுழைந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், மத்திய, மாநில அமைச்சர் பதவிகளை அலங்கரித்தவர்.
 திமுகவின் துணைப் பொதுச் செயலர் பதவியிலிருந்து அவர் விலகியதையடுத்து, காலியான அந்தப் பதவி மீது திமுகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு ஆசை இருந்தாலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய மூன்று முகங்களாகத் திகழும் கனிமொழி எம்.பி., ஸ்டாலினின் கொங்கு மண்டலத் தளபதியாக உருவெடுத்திருக்கும் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் தமிழரசி ஆகியோருக்கிடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.
 திமுக துணைப் பொதுச் செயலர் பதவி என்பது பல முக்கிய நபர்கள் வகித்த பதவி. நெடுஞ்செழியன், ஸ்டாலின், துரைமுருகன், நாஞ்சில் மனோகரன் உள்ளிட்ட முன்னோடிகள் இந்தப் பதவியை வகித்தனர். 2020-ஆம் ஆண்டு வரை 2 துணைப் பொதுச் செயலர்களாக இருந்த இந்தப் பதவி, அதன் பிறகு 5-ஆக விரிவாக்கம் செய்யப்பட்டது.
 அப்போது, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோருடன் சுப்புலட்சுமி ஜெகதீசனும் பொறுப்பில் இருந்தார். திமுகவின் பொதுக் குழு, உயர்நிலை செயல்திட்டக் குழு, கூட்டணிப் பேச்சுவார்த்தை, முக்கிய மாநாடுகள் உள்ளிட்டவற்றில் துணைப் பொதுச் செயலர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாலும், கட்சித் தலைவர், பொதுச் செயலர், பொருளாளர் ஆகிய முக்கியப் பொறுப்புகளை அடைவதற்கு துணைப் பொதுச் செயலர் பதவி ஏணியாக இருப்பதாலும் இது முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகக் கருதப்படுகிறது.
 கனிமொழி: பெண்ணியவாதி, கவிஞர், சிறந்த நாடாளுமன்றவாதி, மாநிலம் தழுவிய திமுகவின் முகம், கருணாநிதியின் கலைவாரிசு என பன்முகத்தன்மை கொண்ட கனிமொழிக்கு இந்தப் பதவியைக் கொடுப்பதே பொருத்தமாக இருக்கும் என கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் கருதுகின்றனர்.
 2013-இல் மாநிலங்களவை உறுப்பினராக கருணாநிதியால் களமிறக்கப்பட்ட கனிமொழி, மிகுந்த பரபரப்பான தேர்தலில் தனது நுட்பமான அரசியல் நுணுக்கத்தால் வெற்றி பெற்று தனது தந்தையின் பாராட்டைப் பெற்றவர். இப்போது மாநில மகளிரணிச் செயலராகவும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினராகவும் இருக்கும் அவரை கட்சியின் துணைப் பொதுச் செயலர் பதவியில் அமர்த்தினால், தென் தமிழகத்தில் திமுக தனது பலத்தை மேலும் உயர்த்த முடியும்.
 சோனியா காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசியத் தலைவர்களுடன் நெருக்கமான நட்பு கொண்டிருக்கும் கனிமொழி, இளம் தலைவராக முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் உதயநிதிக்கு எதிர்காலத்தில் போட்டியாக வந்துவிடக்கூடும் என்ற எண்ணத்தில், கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவில் அவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. 2019 மக்களவைத் தேர்தல், கடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில்கூட கனிமொழியின் ஆதரவாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
 மேலும், 2019 தேர்தலில் மக்களவை உறுப்பினராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், மக்களவையில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோருடன் போட்டிபோட்டே தனது இருப்பை தக்கவைக்க வேண்டிய சூழல் அவருக்கு உள்ளது. துணைப் பொதுச் செயலர் பதவியை கனிமொழிக்கு அளித்தால், பெரிய அதிகார மையமாக அவர் வலம் வரக்கூடும் என முதல்வரின் உறவுகள் எண்ணலாம்.

செந்தில்பாலாஜி: சுப்புலட்சுமி ஜெகதீசன் கொங்கு மண்டலத்தைச்சேர்ந்தவர் என்பதால், அவர் சார்ந்த கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் திமுகவின் துணைப் பொதுச் செயலர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அதே சமுதாயத்தைச் சேர்ந்தவரும் மதிமுக, அதிமுக, அமமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவருமான அமைச்சர் செந்தில் பாலாஜிதான் இந்தப் பதவிக்கு பொருத்தமானவர் என கொங்கு மண்டலத்தில் இருந்து ஆதரவுக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. ஒரு காலகட்டத்தில் ஸ்டாலினால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, இப்போது திமுகவில் சக்தி வாய்ந்த நபராகவும் வலம் வரத் தொடங்கியுள்ளார். 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக தோற்றபோதிலும், கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்றிக் கொடுத்தார் செந்தில் பாலாஜி. குறிப்பாக, அரவக்குறிச்சியில் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த இவர், கரூர் தொகுதிக்கு மாறி, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக களமிறங்கி வெற்றி பெற்றார்.

கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பண பலம், அதிகார பலம் மிக்கவர்களாகக் கருதப்படும் அனைத்து அமைச்சர்களும் வெற்றி பெற்ற நிலையில் விஜயபாஸ்கர் மட்டுமே தோல்வியடைந்தார் என்றால், அதற்கு முக்கியக் காரணம் செந்தில் பாலாஜி. அதன்பிறகு வந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக பெரிய அளவில் காலூன்ற அவர் காரணமாக இருந்து வருகிறார்.

கொங்கு மண்டலத்தின் மையமான கோவையில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் திமுக படுதோல்வி அடைந்த நிலையில், வலுவான, சக்திவாய்ந்த அதிமுகவின் ஆளுமையான வேலுமணிக்கு எதிராக அரசியல் உத்திகளை வகுத்து, கோவை மாநகராட்சித் தேர்தலில் 96 சதவீத வெற்றியைப் பதிவு செய்தவர் செந்தில் பாலாஜி. இதன் காரணமாக, அவர் ஸ்டாலினின் கொங்கு மண்டலத் தளபதியாக திகழ்கிறார்.
 ஆகையால், சமுதாயம், திறமை அடிப்படையிலும், கொங்கு மண்டலத்தில் பாஜகவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வகையிலும் செந்தில் பாலாஜிக்கு துணைப் பொதுச் செயலர் பதவி கிடைக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
 

ADVERTISEMENT

தமிழரசி: எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதாவிடம் சசிகலாவுக்கு ஏற்பட்ட செல்வாக்கால், அதிமுகவுக்கு முக்குலத்தோர் கட்சி என்கிற முத்திரை விழுந்தது.

 அந்த அதிருப்தியில் திமுகவுக்கு நெடுங்காலமாகவே வாக்களித்து வந்தவர்கள் தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தினர். தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றிக்கு இந்த சமுதாயத்தினரின் ஆதரவும் முக்கியக் காரணம். ஆனால், இந்த சமுதாயத்தினரின் நீண்ட காலக் கோரிக்கையான தேவேந்திர குல வேளாளர் பட்டத்தை வழங்கியதால், பிரதமர் மோடி, பாஜக மீது மிகுந்த பற்றுகொண்டு இந்தச் சமுதாயத்தினர் அந்தக் கட்சியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றனர்.
 தென் மாவட்டங்கள் மட்டுமன்றி, டெல்டா, கொங்கு மண்டலங்களிலும் இந்தச் சமுதாயத்தினர் சில தொகுதிகளில் பரலாக இருப்பதால், 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் பல தொகுதிகளில் திமுகவின் வெற்றிவாய்ப்பு கைநழுவியது. குறிப்பாக, மொடக்குறிச்சி, வால்பாறை தொகுதிகளின் முடிவுகளை துல்லியமாக ஆய்வு செய்தால் இந்த உண்மை தெரியவரும். மேலும், 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற திருநெல்வேலி, கடையநல்லூர் தொகுதிகளில் 2021 தேர்தலில் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவ தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினரின் வாக்குகள் அந்தக் கட்சியிலிருந்து பாஜகவுக்கு நகர்ந்ததுதான் காரணம்.
 தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தினர் பாண்டியர் வம்சம் என சீமான் பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து புகழ்ந்து வருவதால், நாம் தமிழர் கட்சியை நோக்கியும் குறிப்பிடத்தக்க அளவு இந்தச் சமுதாயத்தினரின் வாக்குகள் நகர்கின்றன. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இந்தக் கட்சிக்கு 10 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகள் கிடைக்க இதுவே முக்கியக் காரணம்.
 திமுகவில் இருந்து நகரும் இந்தச் சமுதாயத்தினரின் வாக்குகளைத் தக்கவைக்க வேண்டுமெனில், இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு துணைப் பொதுச் செயலர் பதவியை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
 இதற்காக, இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், இப்போதைய மானாமதுரை எம்எல்ஏவுமான தமிழரசிக்கு துணைப் பொதுச் செயலர் பதவி தரப்படலாம் என்ற பேச்சும் உள்ளது. ஏற்கெனவே ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் என பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த இருவர் துணைப் பொதுச் செயலர் பொறுப்பில் இருக்கும்போது, மீண்டும் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 துணைப் பொதுச் செயலர் பதவி விவகாரத்தில் எந்த முடிவை ஸ்டாலின் எடுத்தாலும், உதயநிதியின் எதிர்காலம், 2026 சட்டப் பேரவைத் தேர்தல் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டுதான் எடுக்கப்படும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT