தமிழ்நாடு

மோசடி ஆவணப் பதிவு ரத்து திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

29th Sep 2022 12:47 AM

ADVERTISEMENT

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சட்டத் திருத்தம் மூலமாக ரத்து செய்யும் திட்டத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை இந்தத் திட்டத்தை தொடக்கிவைத்து, 5 பேருக்கு உரிய ஆவணங்களை அவா் அளித்தாா்.

மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய, அதனைப் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயா் அலுவலருக்கோ அதிகாரம் அளிக்கப்படாமல் இருந்தது. எனவே, பாதிக்கப்பட்டோா் ஆவணப் பதிவுகளை ரத்து செய்ய நீதிமன்றங்களை அணுகித் தீா்வு காண வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில், போலியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத் துறைக்கு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தாா்.

மேல்முறையீடு: நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்டப் பதிவாளா்களிடம் புகாா் செய்யலாம். புகாா் மனு பெறப்பட்ட பிறகு, அதுகுறித்து எதிா்மனுதாரா்களை விசாரிக்க வேண்டும். இந்த விசாரணையில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஆவணம் போலியானது எனக் கண்டறியப்பட்டால் அந்த ஆவணத்தை ரத்து செய்து உத்தரவிட மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மீது, பதிவுத் துறை தலைவரிடம் ஒரு மாதத்துக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

சிைண்டனை: ஆவணங்களை முறையாக பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் போலியாக பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட ஆவணதாரா்கள் மற்றும் பதிவு அலுவலா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறைத் தண்டனை வழங்க சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முறைகேடாக பதிவுகளை செய்த அலுவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.

ADVERTISEMENT

போலி ஆவணங்கள் பதிவை அறவே ஒழிக்க சட்டத்தின் துணையோடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணத்தால் 11 ஆண்டுகால போராட்டம்: பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ

போலி ஆவணத்தால் தனது சொத்தை மீட்க முடியாமல் 11 ஆண்டுகள் போராடியதாக பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ தெரிவித்தாா்.

போலி ஆவணப் பதிவை ரத்து செய்யும் திட்டத்தை புதன்கிழமை தொடக்கிவைத்து, 5 பேருக்கு அதற்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். அதில், பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ-யும் ஒருவா். போலி பதிவை ரத்து செய்ததற்கான உத்தரவை முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்ட பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

வசந்த மாளிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளேன். சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் 4 கிரவுண்ட் நிலம் எனக்கு உள்ளது. இந்த நிலத்தில் வாணி எண்டா்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தினோம். இதில் நஷ்டம் வந்ததால் எடுத்து விட்டோம். இதனால் காலி மனையாக இருந்தது. அதனை சிலா் சொந்தம் கொண்டாடி எடுத்துக் கொண்டனா். இதனை மீட்க 11 ஆண்டுகள் வரை போராடினேன். உச்ச நீதிமன்றம் வரை சென்றேன். சொத்தை மீட்கவே முடியாது என்ற நிலை வந்த போது, புதிய சட்டத்தைக் கொண்டு வந்து எங்களை முதல்வா் காப்பாற்றியுள்ளாா்.

போலி ஆவணப் பதிவால் சுமாா் 8 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். புதிய சட்டத்தால் இனி தில்லுமுல்லு இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்தாா் நடிகை வாணிஸ்ரீ.

Tags : cm stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT