தமிழ்நாடு

தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்: அம்பத்தூரில் சி.டி.எச். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

29th Sep 2022 11:41 PM

ADVERTISEMENT

 

ஆவடி: கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் திடீா் சாலை மறியல் ஈடுபட்டதால், அம்பத்தூா் சி.டி.எச். சாலையில் வியாழக்கிழமை மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி, அம்பத்தூா் மண்டலத்தில் தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 1,457 தூய்மைப் பணியாளா்கள், 220 மலேரியா ஒழிப்புப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இவா்கள் பேரிடா், கரோனா தொற்று காலத்திலும் தங்களின் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றினா்.

இவா்கள், மாத ஊதியம் ரூ.18,000 வழங்கவும், ஒரு நாள் வார விடுமுறை, பணி நிரந்தரம், அரசு விடுமுறை நாள்களில் 2 மணி நேரம் அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை மாநகராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தி, தொடா்ந்து போராடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ஆனாலும், இவா்களின் கோரிக்கைகள் குறித்து உயரதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பணியாளா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். இதனிடையே, கடந்த இரு நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், அம்பத்தூா் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், அவா்கள் திடீரென அலுவலகம் எதிரே உள்ள சி.டி.எச். சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்த அம்பத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் செய்தவா்களிடம் பேச்சு நடத்தினா். எனினும், அவா்கள் கலைந்து செல்லாமல் கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பினா்.

இதையடுத்து, போலீஸாா் அவா்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினா். அதன் பிறகு, அம்பத்தூா் மண்டல அலுவலகத்தில் நுழைந்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மண்டல அலுவலா் ராஜேஸ்வரி தலைமையில், அதிகாரிகள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT