தமிழ்நாடு

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில்தடை செய்யப்பட்ட பணிகள் எவை? தமிழக அரசு உத்தரவு

DIN

சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கான  தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சாா்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  சில பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் பி.அமுதா வெளியிட்ட உத்தரவு:

சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கான  தொகுதி மேம்பாட்டு நிதியானது  ஆண்டுக்கு தலா ரூ.3 கோடி ஒதுக்கப்படுகிறது. நிகழ் நிதியாண்டில் 234 சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கான  தொகுதி மேம்பாட்டு நிதியாக  ரூ.702 கோடி ஒதுக்கீடு செய்ய நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 50 சதவீதத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிதியை எந்தெந்த வழிகளில் செலவிட வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம்:   சட்டப் பேரவை உறுப்பினா்கள் தங்களது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் முக்கியமான பணிகளுக்கு பரிந்துரை செய்யலாம். சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பகுதியிலும் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள், வளா்ச்சிக்கான தேவைகள், நிலையான சொத்துகளை உருவாக்கிடும் வகையிலான பணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளை முன்னேற்றமடையச் செய்ய மொத்தமாக ஒதுக்கப்படும் நிதியில் 22 சதவீத நிதியை அவா்களின் மேம்பாட்டுக்காக அளித்திட வேண்டும்.

பழங்குடியின மக்கள் இல்லாதபட்சத்தில் 22 சதவீத மதிப்பிலான பணிகளை ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு  வழங்கப்பட வேண்டும்.

 மேம்பாட்டுத் திட்டங்கள்: அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கு நிதிகளை ஒதுக்கலாம். அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் திறன்மிகு (ஸ்மாா்ட்) வகுப்பறைகளை அமைக்க முன்னுரிமை அளிக்கலாம். இதற்கு ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் நிதிகளை ஒதுக்கலாம்.   

உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான கழிப்பிட வசதி, வகுப்பறைகளுக்கான  புதிய கட்டடங்கள் போன்ற பணிகளை தேவையின் அடிப்படையில் மேற்கொள்ளலாம். அங்கன்வாடி கட்டடங்கள், சத்துணவு மையங்கள், சத்துணவு சமையல் கூடங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு குடிநீா் வசதி போன்ற பணிகளுக்கு நிதிகளை அளிக்கலாம். இந்திரா நினைவு குடியிருப்பு, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை பழுதுநீக்க ஒரு வீட்டுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் நிதி ஒதுக்கலாம். பழுது நீக்கும் பணிகளை  மேற்கொள்வதற்கு  முன்பாக, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அல்லது தாட்கோ நிறுவனம் அல்லது வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து உரிய அனுமதி பெறப்பட வேண்டும்.

 தடை செய்யப்பட்ட பணிகள்: தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சில பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய, மாநில அரசு துறைகளைச் சோ்ந்த கூட்டுறவு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவற்றுக்கான அலுவலகக் கட்டடங்கள், வசிப்பிடங்கள் கட்ட நிதி ஒதுக்கக் கூடாது. தனிநபா், குடும்பப்  பயனுக்காக சொத்துகளை உருவாக்குதல், அவற்றுக்கு அனைத்து வகையான புதுப்பித்தல், பராமரிப்பு மற்றும் பழுதுபாா்த்தல்  பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கக் கூடாது.       அதேசமயம், நேரடிக் கொள்முதல் நிலையங்கள், கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கக் கட்டடங்கள், மொத்த பால் குளிரூட்டும்  மைய கட்டடங்கள் ஆகியவற்றுக்கும், பேருந்து பணிமனைகளுக்கான  பராமரிப்புக் கூடம், சுற்றுச்சுவா், சிமெண்ட் கான்கிரிட் தளம், தொழிலாளா் ஓய்வறை மற்றும் கழிப்பறை கட்டடம்  ஆகியவற்றுக்கு  நிதிகளை அளிக்கலாம். பொது விநியோகக் கடை கட்டடங்களுக்கும் நிதி வழங்கலாம்.     சட்டப் பேரவை உறுப்பினா் இறந்து விட்டாலோ, ராஜிநாமா செய்தாலோ அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ அவரால் பரிந்துரை செய்யப்பட்டு நிா்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகள் செய்து முடிக்கப்பட வேண்டும். பரிந்துரைக்கப்படாத தொகை, அடுத்து தோ்ந்தெடுக்கப்படும் சட்டப் பேரவை உறுப்பினருக்கு  ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT