தமிழ்நாடு

சசிகலா மேல்முறையீட்டு வழக்கு: அக்.26-இல் இறுதி விசாரணை

28th Sep 2022 01:29 AM

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளா் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா தொடா்ந்த மேல் முறையீட்டு மனுவை இறுதி விசாரணைக்காக, அக்.26-க்கு சென்னை உயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக டிடிவி தினகரனும் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017 செப்டம்பா் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளை உருவாக்கியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுச் செயலாளா் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீா்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து 2016 டிச. 29-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீா்மானம் கட்சி உறுப்பினா்கள் என்ற முறையில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும். எனவே, கட்சியில் ஒருங்கிணைப்பாளா் இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளை உருவாக்கியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டுமென சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை 4-ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் எனவும் இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிா்த்து சசிகலா சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமலும் வழக்கை நிராகரித்தது தவறு. ஆரம்ப நிலையிலேயே வழக்கை நிராகரிக்க முடியாது. எனவே, தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எஸ்.செளந்தா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை இறுதி விசாரணைக்காக ஒத்திவைக்க வேண்டுமென இரு தரப்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி, அவசரமாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமா என கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு வழக்குரைஞா் ‘அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்‘ என்று தெரிவித்தாா். இதையடுத்து, வழக்கை இறுதி விசாரணைக்காக அக். 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

Tags : Sasikala
ADVERTISEMENT
ADVERTISEMENT