தமிழ்நாடு

மூன்றாகப் பிரிகிறது சென்னைப் பெருநகரம்?

DIN

சென்னை பெருநகரப் பகுதியை, மத்தியப் பகுதி, வடக்கு, தெற்கு என்ற மூன்றாகப் பிரிக்க சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது. 

சென்னை பெருநகரப் பகுதி தற்போது 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. முந்தைய அதிமுக அரசு, இதனை 1,189 சதுர கிலோமீட்டரில் இருந்து 8,878 சதுர கிலோமீட்டராக உயர்த்தி, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக மாற்ற திட்டமிட்டது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சென்னை பெருநகரப் பகுதியை மறுசீரமைக்கவும், நகரின் பெருநகரப் பகுதியை 5,904 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளது. 

அதாவது, தற்போது 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை பெருநகரப் பகுதியை 5,904 சதுர கிலோமீட்டராக உயர்த்துவதுடன், அதனை சென்னை பெருநகர மத்தியப் பகுதி, சென்னைப் பெருநகரம் - வடக்கு மற்றும் சென்னைப் பெருநகரம் - தெற்கு என மூன்றாகப் பிரிக்க சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் தமிழக அரசிடம் முன்மொழிந்துள்ளது. 

சென்னை பெருநகர மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த நிலையில், அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுத பூஜை விடுமுறைக்குப் பிறகு (அக். 5 ஆம் தேதிக்குப் பிறகு) நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டம், ஏற்கெனவே விரிவாக்கப்பட்ட பகுதிகளை இது கொண்டிருக்காது என்றும் இதற்கென தனியாக திட்டங்கள் தயாரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சென்னை பெருநகர வடக்குப் பகுதி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி (பகுதியளவு), அரக்கோணம் (பகுதியளவு), திருவள்ளூர், பூந்தமல்லி (பகுதியளவு) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 8 தாலுகாக்களைக் கொண்டு 2,908 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும்.

அதுபோல சென்னை பெருநகர தெற்குப் பகுதி 1,809 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிவடையும். இது காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், குன்றத்தூர் (பகுதியளவு) மற்றும் வண்டலூர் (பகுதியளவு) தாலுகாக்களைக் கொண்டிருக்கும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு பகுதிகளுக்கும் தனித்தனியாக மண்டல அலுவலகங்கள் இருக்கும். மேலும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் திட்டமிடல் பிரிவுகள் சென்னை பெருநகர மத்தியப் பகுதியுடன் இணைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சூழ்நிலையில், சென்னை பெருநகரப் பகுதி விரிவாக்கத்தின் அவசியம் குறித்து சிஎம்டிஏ முதலில் விளக்கமளிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக நகர்ப்புற பொறியியல் துறை முன்னாள் பேராசிரியர் கே.பி.சுப்பிரமணியன் கூறுகிறார். நிபுணர்களின் கருத்துகள் மற்றும் மக்களின் ஆலோசனைகளுடன் ஒரு சுதந்திரமான, நடுநிலையான குழுவை நிறுவி முடிவு காண வேண்டும் என்கிறார். 

மேலும், 'முதல் மற்றும் இரண்டாவது திட்டப் பணிகளில் உள்ள சிலவற்றை சிஎம்டிஏவால் நிறைவேற்ற முடியவில்லை. ஏற்கெனவே போடப்பட்ட I மற்றும் II திட்டப் பணிகளை ரத்து செய்துவிட்டு தற்போதுள்ள உள்ளூர் ஊரமைப்பு மற்றும் விரிவாக்கப்படவுள்ள பகுதியில் செயல்படும் புதிய நகர மேம்பாட்டு ஆணையங்களை கலைத்துவிட்டு சென்னை பெருநகரப் பகுதியை விரிவாக்க, சிஎம்டிஏ ஏன் முடிவு செய்துள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

அதுமட்டுமின்றி, இந்த திட்டங்கள் விவசாய நிலங்களை அழிந்துவிடும். சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

அதுநேரத்தில் தொழில்சார் நகர திட்டமிடுபவர்களின் சங்கம்(ஏபிடிபி) அமைப்பின் தலைவர் கே.எம். சதானந்த் இதுகுறித்து, சென்னை பெருநகரப் பகுதியை மூன்றாகப் பிரிப்பது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார். 

'சென்னை பெருநகரப் பகுதியின் வளர்ச்சித் திறனை மதிப்பிட்டு ஆய்வு செய்து பின்னர் விரிவாக்கம் செய்ய வேண்டும் மற்றும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திட்டமிட வேண்டும். ஏனெனில் விரிவாக்க திட்டமிட்டுள்ள பரப்பளவு தற்போதைய அளவைவிட நான்கரை மடங்கு அதிகமாக உள்ளதால் இவ்வளவு பெரிய பகுதியை எப்படி நிர்வகிக்க முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இது அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT