தமிழ்நாடு

மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டு கண்டுபிடிப்பு!

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மானாமதுரை வட்டம்  வாடி அருகே துலுக்கனேந்தல் கண்மாய்க்கு கிழக்கே வயல் பகுதியில் 400 வருடத்திற்கு முற்பட்ட கல்வெட்டுடன் கூடிய திருவிடையாட்டம் என்று சொல்லக்கூடிய தானக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த  வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்  மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு இந்த கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.

நாயக்கர் காலத்தில் பெருமாள் கோயிலுக்கு வழங்கப்பட்ட தான நிலத்தைக் குறிக்கும் விதமாக தமிழ் எழுத்துகள் பொறித்த கல்வெட்டாக இது உள்ளது. பொதுவாக முற்காலங்களில் மன்னர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட நிலங்களை கோயில்களுக்கோ தனிநபர்களுக்கோ தானம் வழங்குவது ஒரு மரபாக பின்பற்றி வந்துள்ளனர். அவ்வாறு  சைவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களை தேவதானம் என்றும் வைணவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களை  திருவிடையாட்டம் என்றும் கூறுவார்கள்.

மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இந்த கல்லிலும்  திருவிடையாட்டம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல் ஒரு அடி அகலமும் 3 அடி நீளமும் கொண்டதாக உள்ளது. இலங்கையில் ராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதையை மீட்க ராமர் வானர படைகளுடன் இலங்கைச் சென்ற போது இந்த வானரங்கள் மானாமதுரையில் தங்கி அதன்பின் இலங்கை சென்றதாக வரலாறு. எனவே மானாமதுரை புராண காலத்தில் வானரவீர மதுரை என அழைக்கப்பட்டு அதன் பின் பெயர் மருவி மானாமதுரை என அழைக்கப்படுகிறது.

மானாமதுரையின் பழமையான பெயரான 'வானவீரன்மதுரை' என இந்தக் கல்வெட்டில் நான்கு வரிகள் எழுதப்பட்டு உள்ளது. அதில் "வானவீரன்மதுரை அழகர் திருவிடையாட்டம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லின் நான்கு புறத்திலும் சக்கரம் கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு வாசகத்தின்படி மானாமதுரையின் பழமையான பெயரான வானவீரன் மதுரை என்ற பெயரே மருவி மானாமதுரை என்று மாறியுள்ளது என்பது இந்த கல்வெட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அழகர் திருவிடையாட்டம் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம்  மானாமதுரையில் உள்ள வீர அழகர் கோயிலுக்கு நிலதானம் வழங்கியதை இக்கல்வெட்டுச் செய்தி உறுதிபடுத்துகிறது. மேலும் இந்த கல்வெட்டு மூலம் இப்பகுதி நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

வாடி துலுக்கனேந்தல் பகுதியில் மானாமதுரை  ஊரின் பழமையான பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT