தமிழ்நாடு

குமரி அனந்தனுக்கு வீடு வழங்கியது தமிழக அரசு!

27th Sep 2022 05:51 PM

ADVERTISEMENT

இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு அரசு சார்பில் குடியிருப்புக்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.  

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று  இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையினை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருட்டிணன்-தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ஆம் நாளன்று பிறந்தவர். பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர்-காங்கிரசுப் பேரியக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர், ஓய்வறியாத உயரியத் தொண்டர், மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டதோடு, இலக்கியச் செல்வராகவும், மேடை மன்னராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் மிளிர்பவர் அன்பில் சிறந்த குமரி அனந்தன். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் அரும் பணியாற்றியவர்.

ADVERTISEMENT

தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்து வரும் அவர், தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், அவரது கோரிக்கையினைக் கனிவுடன் ஏற்று, அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந.அருள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதையும் படிக்க | காங். தலைவர் போட்டியிலிருந்து விலகுகிறாரா அசோக் கெலாட்?

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT