தமிழ்நாடு

மூன்று கார்களில் 633 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்: காவல்துறையினர் அதிரடி

27th Sep 2022 11:49 AM

ADVERTISEMENT

சங்ககிரி : சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில்  மூன்று கார்களில் கடத்தி வரப்பட்ட போதை பொருள்களை சங்ககிரி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். 

சங்ககிரி காவல் ஆய்வாளர் ஆர்.தேவிக்கு சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி வழியாக அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை சிலர் காரில் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதையும் படிக்க.. ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? ஆவேசப் பேச்சால் அசர வைத்த விக்ரம்

அதனையடுத்து காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை காவலர்கள் அப்பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள தாபா உணவு விடுதி வளாகத்தில் நிறுத்தியிருந்த மூன்று கார்களை சோதனை செய்துள்ளனர். அக்கார்களில் அரசால் தடைசெய்யப்பட்ட 633 கிலோ போதை பொருள்கள் கடத்தி வரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  

காரினை ஓட்டி வந்தவர்களை காவலர்கள் விசாரணை செய்த போது காரில் வந்தவர்கள் காரினை அப்பகுதியிலேயே விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இது குறித்து சங்ககிரி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மூன்று கார்கள், அரசால் தடை செய்யப்பட்ட  633 கிலோ போதை பொருள்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் உணவு விடுதியில் பணியாற்றி வரும் பணியாளர்களிடம் காவலர்கள் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். சங்ககிரி அருகே அதிகாலையில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் பறிமுதல் செய்திருப்பது பொதுமக்களிடத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT