தமிழ்நாடு

இணையவழி விளையாட்டுகளைத் தடை செய்ய அவசர சட்டம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

27th Sep 2022 12:50 AM

ADVERTISEMENT

இணையவழி விளையாட்டுகளைத் தடை செய்வது தொடா்பான அவசரச் சட்டத்துக்கு திங்கள்கிழமை நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தச் சட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி தெரிவித்தாா்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் காலை 9.35 மணிக்குத் தொடங்கிய கூட்டம் காலை 10.05 மணிக்கு நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் இணையவழி விளையாட்டுகளைத் தடை செய்வது தொடா்பான அவசரச் சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஆளுநா் ஒப்புதல்: இணையவழி விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்த அவசரச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடா்பான நடைமுறைகள் குறித்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இணையவழி விளையாட்டுகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடா்பாக தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க, சென்னை உயா் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக் குழு கடந்த ஜூன் 27-இல் முதல்வரிடம் அறிக்கை அளித்தது. இந்த அறிக்கை அமைச்சரவைக் கூட்டத்திலும் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி பள்ளிக்கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள், கலந்தாலோசனைக் கூட்டங்கள் வாயிலாக பெறப்பட்ட கருத்துகளுடன் சட்டத் துறை ஆலோசனையையும் பெற்று அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டது. இந்தச் சட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் வெளியிடப்படும்’ என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக அரசின் அவசரச் சட்டம்: இணையவழி ரம்மி விளையாட்டுக்கு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டது. இதற்கான சட்டத்துக்கு அப்போதைய ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தாா். இந்தச் சட்டத்தின்படி, இணையவழியில் ரம்மி விளையாடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், ஆறு மாதங்கள் சிறைத்

தண்டனையும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனப் பொறுப்பாளா்கள் ரம்மி விளையாட்டரங்கம் வைத்திருந்தால் ரூ.10 ஆயிரம் அபராதமும், இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சில தனியாா் நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

வழக்குகளை விசாரித்த உயா் நீதிமன்றம், தமிழகத்தில் இணையவழி ரம்மி விளையாட்டுக்கு தடைவிதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்தது. மேலும், இணையவழி விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனவும், புதிய சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் உயா் நீதிமன்றம் தெரிவித்தது. இதனிடையே, இணையவழி ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த அதிகம் போ் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் அரங்கேறின.

புதிய அரசின் சட்டம்: அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இணையவழி ரம்மி தடை சட்டம் ரத்தானதால், புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதன்படி, இணையவழி விளையாட்டுகளைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு வகுத்து அதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த அவசர சட்டத்துக்கு ஓரிரு நாள்களில் ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளிப்பாா் எனத் தெரிகிறது. இதன்பின், அவசர சட்டம் வெளியிடப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT