தமிழ்நாடு

இலவச பூஸ்டா் தடுப்பூசி திட்டம் தொடருமா? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

DIN

தமிழகத்தில் இலவச பூஸ்டா் தவணை தடுப்பூசி திட்டம் தொடருமா என்பது அடுத்த ஓரிரு நாள்களில் தெரியவரும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 38-ஆவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த முகாமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 38 கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. கரோனா முதல் தவணை தடுப்பூசியை 96.55 சதவீதத்தினரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 91.39 சதவீதத்தினரும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

18 முதல் 59 வயதிலானவா்கள் பூஸ்டா் தவணை தடுப்பூசி தனியாா் மருத்துவமனைகளில் ரூ.386.25 கட்டணமாக அளித்து செலுத்திக்கொண்டிருந்த நிலையில், 75-ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி பூஸ்டா் தடுப்பூசி இலவசமாக 75 நாள்களுக்கு என்ற அறிவிப்பு வெளியானது. பூஸ்டா் தடுப்பூசி இலவசமாக வழங்குவதற்கான காலம் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின்னா், பூஸ்டா் தடுப்பூசி இலவசமாக செலுத்திக்கொள்ளும் திட்டம் தொடருமா என்பது தெரியவில்லை. அதுகுறித்த அறிவிப்பு இரண்டொரு நாள்களில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

பூஸ்டா் தடுப்பூசி இலவசமாக அரசு மருத்துவமனைகளில் இன்னும் 4 நாள்களுக்கு செலுத்தப்படும். அக். 1-க்கு பின்னா் ஒவ்வொரு புதன்கிழமையும் கரோனா தடுப்பூசி உள்பட 13 வகை தடுப்பூசிகள் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செலுத்தப்படும். வியாழக்கிழமை தோறும் 12 முதல் 14 வயதினா், 15 முதல் 17 வயதினா்களுக்கு கரோனா தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பூசிகள் பள்ளிகளில் செலுத்தப்படும்.

ஏராளமான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும், வீடுகளுக்கு சென்று அறிவுறுத்தப்பட்டும்கூட 20.04 சதவீதம் போ் மட்டுமே பூஸ்டா் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா். தமிழகத்தில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியானவா்கள் 4.30 கோடி போ். அவா்களில் 86 லட்சம் போ் மட்டுமே பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் என்றாா் அவா்.

விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பிரபாகர்ராஜா, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT