தமிழ்நாடு

ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதா? அமைச்சர் விளக்கம்

26th Sep 2022 09:57 PM

ADVERTISEMENT

 

முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகள் விவகாரத்தில் குறைகூறி அரசின் நல்ல பெயரைக் கெடுக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சிப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டதாக, மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார்.  

அரசை குறைகூறி, நல்ல பெயரை எடுக்க முயற்சிக்கும் அவருடைய  நோக்கம் எடுபடாது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இறந்தவர்கள், இரண்டு ஓய்வூதியம் பெறுபவர்கள், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் போன்றவர்களைக் கண்டறிந்து, பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கிவருவது இயல்பானது. 

ADVERTISEMENT

அதிமுக ஆட்சியில், 2014-2015ம் ஆண்டில் மட்டும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெற்றுவந்த 4.38 லட்சம் பயனாளிகள் தகுதியற்றவர்களாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2015-16 முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை, 10.82 லட்சம் பயனாளிகள் தகுதியற்றவர்களாக நீக்கம்     செய்யப்பட்டுள்ளனர். 

ஆகமொத்தம் அதிமுக ஆட்சியின் 7 ஆண்டுகளில், 15.20 லட்சம் நபர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

திமுக ஆட்சியில் கடந்த ஆண்டில் மட்டுமே 4 லட்சத்து 92 ஆயிரம் நபர்களுக்கு புதியதாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின் கீழ் 2020-21ஆம் ஆண்டில் 2.57 லட்சம் நபர்களுக்கு மட்டுமே புதியதாக ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

2020-2021ஆம் ஆண்டில், ஓய்வூதியம் வழங்கிட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.4,306 கோடியினை உயர்த்தி 2022-23ஆம் ஆண்டில் ரூ.4,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT