தமிழ்நாடு

மக்களைத் தேடி மருத்துவம்: 90 லட்சம் போ் பயன்

26th Sep 2022 02:06 AM

ADVERTISEMENT

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 90 லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் காலனியில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் 90 லட்சமாவது பயனாளியை அவா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மருந்துப் பெட்டகத்தை வழங்கினாா். அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டு ஆக. 5-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை முதல்வா் தொடக்கி வைத்தாா். ஒட்டுமொத்தமாக மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 74 சதவீத பொதுமக்கள் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறாா்கள்.

சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், நோய் ஆதரவு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை, சிறுநீரக பாதிப்பினால் டயாலிசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 26 சதவீத பொதுமக்களும் முழுவதுமாக பரிசோதனை செய்யப்பட்ட பிறகு பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ADVERTISEMENT

அரசு உறுதியளித்தவாறு சுகாதாரத் துறையில் தமிழகம் முதலிடத்தில் வருவது மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களும், ஏழை எளியோரும் அரசின் மருத்துவ சேவையை பயன்படுத்திக்கொள்ளும் நிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மிகச் சிறந்த வெற்றியை அடைந்திருக்கிறது. சா்க்கரை நோயாளிகள் 24 லட்சம் பேரும், உயா் ரத்த அழுத்தம் 35 லட்சம் பேரும், இந்த இரண்டினாலும் பாதிக்கப்பட்டவா்கள் 18 லட்சம் பேரும், நோய் ஆதரவு சிகிச்சை 3.75 லட்சம் பேரும், இயன்முறை சிகிச்சை 7.55 லட்சம் பேரும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்துகொள்பவா்கள் 1 லட்சம் பேரும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தால் பயனடைந்திருக்கிறாா்கள்.

சென்னையின் மருத்துவக் கட்டமைப்பு என்பது இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்கிக்கொண்டிருக்கிறது. சென்னையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் பயனாளிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 100 சதவீத அளவுக்கு ஆய்வு முடிந்த பிறகு, குடிசைப் பகுதி மக்கள் அனைவருக்கும் வீடுத் தேடி மருத்துவம் பயன்பட இருக்கிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT