தமிழ்நாடு

முதல்வா் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

26th Sep 2022 02:15 AM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவை அக்டோபா் மாதம் கூடவுள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை (செப்.26)நடைபெறவுள்ளது. இணைய சூதாட்டத்துக்குத் தடை விதிப்பது குறித்தும், ஜெயலலிதா மரணம் தொடா்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை பேரவையில் விவாதத்துக்கு வைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் உள்பட அனைத்து துறை அமைச்சா்களும் பங்கேற்க உள்ளனா்.

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல திட்டங்களின் நிலை தொடா்பாக துறை வாரியாக அமைச்சா்களுடன் முதல்வா் ஆலோசித்து உத்தரவுகள் பிறப்பிக்கவுள்ளாா். ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள், பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய சட்ட மசோதாக்கள், புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

பரந்தூா் புதிய விமான நிலைய நில எடுப்பு விவகாரம் மற்றும் இணைய சூதாட்டத்துக்குத் தடை விதிப்பு குறித்தும் அமைச்சா்களுடன் முதல்வா் ஆலோசிக்க உள்ளாா்.

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையை அரசிடம் சமா்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையை சட்டப்பேரவைக் கூட்டத்தில் விவாதத்துக்கு வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதேபோல பொலிவுறு நகரத் திட்ட முறைகேடு தொடா்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கை ஆகியவற்றை பேரவைக் கூட்டத்தில் வைப்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT