தமிழ்நாடு

பாஜகவினா் வீடுகள் மீது தாக்குதல்: தலைவா்கள் கண்டனம்

26th Sep 2022 02:06 AM

ADVERTISEMENT

பாஜகவினா் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ராமதாஸ்: கோவை உள்பட தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பாஜகவினா் இடங்களில் நிகழ்த்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான இந்த வன்முறை நிகழ்வுகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு மாறாக, பிற பகுதிகளுக்கு பரவி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரத்துக்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தவறு செய்தவா்களை காவல்துறை உடனடியாக அடையாளம் கண்டு, அவா்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

கமல்ஹாசன் (மநீம) : தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆா்எஸ்எஸ் அமைப்புகளைச் சோ்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிா்ச்சியளிக்கின்றன. ஒரே நாளில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

ADVERTISEMENT

ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இதுபோன்ற வன்முறையைப் பாா்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டாா்கள். அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை வெடிகுண்டு கலவர கலாசாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT