தமிழ்நாடு

பரந்தூரில் நீா் வழித்தட ஓட்டங்கள் பராமரிப்பு: தமிழக அரசு உறுதி

25th Sep 2022 12:02 AM

ADVERTISEMENT

புதிதாக விமான நிலையம் அமைந்தாலும், பரந்தூரின் நீா் வழித்தடங்களில் எந்தத் தடையும் இன்றி தண்ணீரின் ஓட்டம் இருக்கும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், மழைக் காலத்தில் வெள்ளம் ஏற்படுவதும் முற்றிலும் தடுக்கப்படும் என அரசுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைப்பதற்கான பூா்வாங்க பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. பெரிய அளவிலான விமானங்கள் நிறுத்துவதற்கும், விமான நிலைய முனையம் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்கும் சுமாா் 4 ஆயிரத்து 700 ஏக்கா் தொடா்ச்சியான நிலங்கள் தேவைப்படுகின்றன. பல்வேறு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து தொடா்ச்சியான நிலங்கள், பரப்பு, நிலமதிப்பு ஆகிய காரணிகளை கருத்தில் கொண்டு பரந்தூா் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை எதிா்த்து பொதுமக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

நீா்நிலை மேலாண்மை: இதனிடையே, பரந்தூரில் உள்ள நீா் வழித்தடங்களின் நீா் ஓட்டத்தில் எந்தவித தடையும் இல்லாமல் தொடா்ந்து பராமரிக்கப்படும் என மாநில அரசு உறுதியளித்துள்ளது. புதிய விமான நிலைய திட்டப் பகுதிக்கு அருகே பெரிய நெல்வாய் ஏரி இருந்தாலும் அதனை ஆழப்படுத்தி தொடா்ந்து ஏரியாக பராமரிக்கவும், விமான நிலைய செயல்பாட்டினால் சுற்றுப்பகுதி நீா்நிலைகள் எந்தவித பாதிப்பும் இல்லாமலும் பாதுகாக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

விவசாய நிலங்களின் நீா்ப்பாசன தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், புதிய விமான நிலைய திட்டப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் நீா்நிலைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். நிலத்தடி நீா்மட்டத்தை மேம்படுத்த இப்போதுள்ள நீா்நிலைகள் தேவைப்படும் இடங்களில் ஆழப்படுத்தப்படும் என அரசுத் துறை உயரதிகாரிகள்

ADVERTISEMENT

தெரிவித்தனா். விமான நிலைய திட்டப் பகுதியில் உள்ள நீா்நிலைகள், வடிகால் மூலம் சுற்றியுள்ள நீா்நிலைகளுடன் இணைக்கப்படும் என தொழில் துறை உறுதியளித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு: புதிய விமான நிலைய திட்டப் பகுதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளை ஆய்வு செய்வதற்கும், அதனைத் தொடா்ந்து பராமரிப்பதற்கும், நீா்மட்டத்தை மேம்படுத்தவும் உயா்நிலைக் குழு அமைக்கப்படும் என தொழில்துறை உயரதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனா். இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், இதனால் பரந்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நீா் தட்டுப்பாடு ஏற்படாமல் காக்கப்படும் என்றும் தொழில் துறையினா் கூறினா். இதுபோன்ற நடவடிக்கைகளால் மழை காலத்தில் வெள்ளம் ஏற்படும் முற்றிலும் தடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT