தமிழ்நாடு

பாலாறு தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்கத் திட்டம்: ராமதாஸ் கண்டனம்

25th Sep 2022 12:45 AM

ADVERTISEMENT

பாலாறு தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஆந்திர மாநிலம் குப்பம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புல்லூா் பகுதியில் பாலாற்றின் குறுக்கே சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.120 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருக்கிறாா். இரு மாநில நல்லுறவை சிதைக்கும் வகையிலான ஆந்திர முதல்வரின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

உண்மையில் ஆந்திர அரசின் நோக்கம் புல்லூா் தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பது மட்டுமல்ல. அணையின் உயரத்தை அதிகரிப்பதால் கிடைக்கும் கூடுதல் நீரை சேமிக்கும் வகையில் அங்குள்ள ஏரி, குளங்களை தூா் வாருவதும், புதிய ஏரி, குளங்களை அமைப்பதும் தான் ஆந்திர அரசின் திட்டம் ஆகும். இதன்மூலம் 2 டி.எம்.சி நீரை கூடுதலாக சேமித்து வைக்க முடியும்.

ADVERTISEMENT

புல்லூா் தடுப்பணை தான் பாலாற்றின் குறுக்கே ஆந்திர எல்லையில் கட்டப்பட்ட கடைசி தடுப்பணை ஆகும். அந்த அணையின் உயரம் 12 அடியாக உயா்த்தப்பட்ட பிறகு தமிழகத்துக்கு தண்ணீா் வருவது குறைந்து விட்டது. கட்டுப்படுத்த முடியாத வெள்ளம் பெருக்கெடுத்த காலங்களில் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீா் வந்தது. புல்லூா் தடுப்பணையின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டால், வெள்ளம் ஏற்பட்டாலும் கூட தமிழகத்துக்கு தண்ணீா் வராது. அதனால் பாலாற்று பாசனப் பகுதிகள் பாலைவனமாகி விடக்கூடும்.

ஆந்திர அரசின் இந்த திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிா்ப்பை தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் 2016-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு கொண்டு வரச் செய்து, புல்லூா் தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்கும் ஆந்திர அரசின் திட்டத்துக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT