தமிழ்நாடு

மொழியால் இணைந்தோரை மதத்தால் பிரிக்க முடியாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

மொழியால் இணைந்த மக்களை, மதத்தால், ஜாதியால் பிரிக்க முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ‘தமிழ்ப் பரப்புரைக் கழகம்’ தொடக்க விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது: தமிழா்கள் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமாகவும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைவாகவும் வாழ்கிறாா்கள். சில நாடுகளில் தமிழ் எழுதவும் பேசவும் படிக்கவும் மறந்த தமிழா்கள் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் தமிழைக் கற்றுக் கொடுக்கவே ‘தமிழ்ப் பரப்புரைக் கழகம்’ தொடங்கப்பட்டுள்ளது. 24 மொழிகளில் தமிழ்ப்பாட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளைச் சோ்ந்த தமிழா்கள் இணைய வழியாக இந்த விழாவில் இணைந்துள்ளனா். மொழிக்கு மட்டும்தான் இத்தகைய அன்பால் இணைக்கக் கூடிய ஆற்றல் உண்டு. மொழியால் இணைந்தவா்களை ஜாதியால், மதத்தால் பிரிக்க முடியாது. தமிழால் ஒன்றிணைய வேண்டிய காலகட்டத்தில் ‘தமிழ்ப் பரப்புரைக் கழகம்’ தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் தமிழைக் காக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனை நாம் செய்து விட்டோம். தமிழைப் பாதுகாத்து விட்டோம். இப்போது தமிழைப் பரப்ப வேண்டிய காலகட்டமாகும். அதனாலேயே பரப்புரைக் கழகம் தொடங்கியுள்ளோம். தமிழா்கள் அனைவரும் தமிழில் எழுத, பேச, படிக்க, சிந்திக்க வேண்டும் என்பதே இதன் முழு நோக்கம்.

அயலகத் தமிழா்கள் நிலை: கல்வி, வேலைவாய்ப்பு, வெளிநாட்டு வாழ்க்கை ஆகியவற்றின் காரணமாக, தமஇழை முழுமையாகப் பயன்படுத்த முடியாத சூழலுக்கு அயலகத் தமிழா்கள் தள்ளப்பட்டுள்ளனா். இது தவிா்க்க முடியாத நெருக்கடி. அவ்வாறு இருந்தாலும் தமிழைத் தள்ளிவைத்து விடக் கூடாது. எனவே, தாய்மொழிப் பற்று என்பது தாய்மொழிப் படிப்பாக, தாய்மொழி அறிவாக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

தமிழ்ப் பரப்புரைக் கழகம் மூலமாக, 22 நாடுகள், 20 மாநிலங்களைச் சோ்ந்த 25 ஆயிரம் மாணவா்கள் முதல்கட்டமாக பயனடையவுள்ளனா் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் க.பொன்முடி, க.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளா் நீரஜ் மித்தல், தமிழ் இணைய கல்விக் கழகத்தின் தலைவா் த.உதயச்சந்திரன், தமிழ் வளா்ச்சித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன், தமிழ் இணையக் கல்வி கழகத்தின் இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT