தமிழ்நாடு

விழுப்புரம் ரயில் நிலையத்தில் சிறுத்தையின் தோல் பறிமுதல்: ரயில்வே போலீசார் விசாரணை

24th Sep 2022 12:13 PM

ADVERTISEMENT

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்தி வரப்பட்ட சிறுத்தையின் தோலை ரயில்வே போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, பான்பராக் போன்ற போதைப் பொருள்கள், மதுபட்டிகள் போன்றவை ரயில் மூலம் கடத்தி வருவதைத் தடுக்க ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இரவு பகலாக விழுப்புரம் ரயில் நிலையத்தில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சனிக்கிழமை காலை விழுப்புரம் ரயில்வே உதவி காவல் ஆய்வாளர் அசோகன் தலைமையில் தலைமை காவலர் வினோத், தனிப்பிரிவு தலைமை காவலர் ரவி உள்ளிட்டோர் ரயில் நிலைய வளாகம் மற்றும் ரயில் போட்டிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

அப்போது காட்பாடியில் இருந்து விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ரயிலில் ரயில்வே போலீஸார் ஏறி சோதனையிட்டனர். அப்போது அந்த ரயிலின் 4 ஆவது பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் பை ஒன்று கிடைத்தது. அதனை போலீஸார் சோதனையிட்டனர். அந்தப் பையில் சிறுத்தையின் தோல் இருப்பது கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த சிறுத்தை தோலை பறிமுதல் செய்து ரயில்வே காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை தோலை ரயிலில் கடத்தியவர்கள் யார்?எங்கிருந்து? எங்கு? கடத்த முயன்றனர் உள்ளிட்டவை குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
  
சிறுத்தை தோல் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விழுப்புரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தையின் தோல் வெளிநாட்டுக்கு கடந்த முயன்றனரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சிறுத்தையின் தோல் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பு இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT