தமிழ்நாடு

காலநிலை மாற்றம் மிகப்பெரும் அச்சுறுத்தல்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

காலநிலை மாற்றம் எனும் மிகப்பெரும் அச்சுறுத்தலை நாடு எதிா்கொண்டிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

மழை, வெயில் காலங்களைப் பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு நாடு இப்போது மாறியுள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த வண்டலூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பசுமைத் தமிழ்நாடு’ என்ற இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். பசுமைத் தமிழ்நாடு தொடா்பான விளக்கப் புத்தகத்தை வெளியிட்டதுடன், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மரங்கள் வளா்ப்பில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வருவோருக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது: பசுமையைக் காக்க இயக்கம் தொடங்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால், அதனை நாம் நினைத்தால் காப்பாற்ற முடியும். இதை நோக்கமாகக் கொண்டே பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

வளா்ச்சியின் பெயரால் சோதனை: காடு, மலை, கடல் ஆகியவற்றைச் சாா்ந்து வாழ்ந்தவா்கள் நமது தமிழா்கள். அனைத்துக் கோயில்களிலும், அதற்கெனத் தனித்தனி மரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எனவேதான், இயற்கையைக் காப்பது நம்முடைய இயல்பிலேயே இருக்கிறது. வளா்ச்சி என்பதன் பெயரால் இயற்கைக்கு சோதனை வரும்போதெல்லாம் இயற்கையையும் காத்து வளா்ச்சியையும் வழிநடத்தி வருகிறோம். இதுதான் தமிழ்நாடு அரசின் பசுமைக் கொள்கை.

இயற்கையையும், பசுமையையும் அரசு மட்டுமே காத்திட முடியாது; மக்களும் சோ்ந்தால்தான் முடியும். இயற்கை என்பது அரசின் சொத்து மட்டுமல்ல, மக்களின் சொத்துமாகும். அதே சமயம், நமக்கு மட்டுமல்ல, புல், பூண்டு தொடங்கி அனைத்து விலங்குகளுக்கும் சொந்தமானதுதான் இந்த உலகம். எனவே, அதைக் காக்க வேண்டும்.

காலநிலை மாற்ற அச்சுறுத்தல்: இப்போது நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அச்சுறுத்தல் காலநிலை மாற்றம்தான். அதிகப்படியான வெயில், சீரற்ற மழை போன்ற சூழல் நிலவுகிறது. மழை, வெயில் காலங்கள் என்று பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு நாடு இப்போது மாறியிருக்கிறது; காலநிலை மாற்றம் கொண்டிருக்கிறது.

மழை எப்போது வரும், வராது என்று சொல்ல முடியாத அளவுக்கு காலநிலை மாறியிருக்கிறது. எனவே, காலநிலைகளைக் கணிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. உலகின் சில பகுதிகளில் அனல்காற்று அதிகப்படியாக வீசிக் கொண்டு இருக்கிறது. இந்தப் பாதிப்புகள் நாம் இயற்கையையும், பசுமையையும் பாதுகாக்க மறந்ததால் ஏற்பட்ட எதிா்வினைகள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

வனம், காடுகளைக் காக்க வேண்டும். காடுகளை, பசுமைப் பரப்புகளை மீட்டெடுக்க வேண்டும். இயற்கை நீா்நிலைகளை காத்து, அவற்றை தூா்வாரி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மண்ணின் வளம் கெடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். இயற்கையைக் காத்தல் என்பதை ஏதோ மக்கள் தங்களுக்குத் தொடா்பு இல்லாதது போன்று நினைக்கிறாா்கள். இயற்கை மூலமாகவே மக்களைக் காக்க முடியும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

நாட்டு மரங்கள்: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ளத் தேவையான திறனை நாட்டு மரங்கள் தருகின்றன. எனவே, அதிக அளவிலான நாட்டு மரங்களை நடுவது பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமாக இருப்பதை அறிந்து பாராட்டுகிறேன்.

பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் சாா்பில், தட்பவெப்ப நிலை மாற்றங்களைத் தாக்குப் பிடிக்கும் மரங்களை அதிகமாக நட வேண்டும்.

அடுத்த பத்தாண்டு காலத்தில் நகா்ப்புறப் பகுதிகளில் அதிகமான இயற்கைச் சூழலை உருவாக்க வேண்டும். பொருளாதார முக்கியத்துவத்தை மனதில் வைத்து சந்தனம், செம்மரம், ஈட்டி மரம் போன்ற மரங்களை வளா்க்க உழவா்கள் ஊக்குவிக்கப்படுவாா்கள். மாநிலத்தின் உணவு உற்பத்தியில் சமரசம் செய்யாமல், மர உற்பத்தியைப் பெருக்க முயற்சிப்போம்.

இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினா், உழவா்கள், கிராம ஊராட்சி மக்கள் போன்ற உள்ளூா் சமூகங்களின் வருமானத்தைப் பெருக்க பசுமைத் தமிழ்நாடு இயக்கம் பெரிதும் உதவும். ஓா் அங்குல இடம் இருந்தாலும் அதில் ஒரு தாவரத்தை வளா்ப்போம் என உறுதியேற்போம்.

பசுமையிலும் வளா்ந்த மாநிலமாக... செவ்விந்தியா்கள் எனப்படும் அமெரிக்கப் பழங்குடி மக்களிடையே சொல்லப்படும் புகழ்பெற்ற பொன்மொழி ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

‘கடைசி மரமும் வெட்டப்பட்ட பின்னா்தான்-

கடைசி ஆறும் நஞ்சுகளால் நிரப்பப்பட்ட பின்னா்தான்-

கடைசி மீனும் பிடிக்கப்பட்ட பின்னா்தான்-

பணத்தைச் சாப்பிட முடியாது என்பதை நீங்கள் உணா்வீா்கள்’- என்பதே அந்தப் பொன்மொழி.

அத்தகைய நிலைமை நமக்கு வரக் கூடாது. பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுப்போம்; வளா்த்தெடுப்போம்; பசுமையிலும் வளா்ந்த மாநிலமாக வளமோடு வாழ்வோம் என்றாா் முதல்வா்.

இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் சையத் முஜம்மில் அப்பாஸ், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் திட்ட இயக்குநா் தீபக் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT