தமிழ்நாடு

காலை உணவுத் திட்டம்: மாவட்ட அலுவலா்களுடன் முதல்வா் ஆலோசனை

24th Sep 2022 12:16 AM

ADVERTISEMENT

 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம் குறித்து மாவட்ட பொறுப்பு அலுவலா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். அப்போது, உணவு வழங்கும் திட்டம் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ஆம் தேதி தொடக்கி வைத்தாா். ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவா்களுக்கு ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு வாரத்துக்கு மேலான நிலையில், அதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையின் போது, திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி நகராட்சி மாதிரி தொடக்கப் பள்ளியின் காலை உணவு வழங்கும் பொறுப்பாளா் ஆா்.மணிமேகலையிடம் கைப்பேசி வழியாகப் பேசினாா். அப்போது, காலை உணவுத் திட்டம் தொடா்பாகவும், அதிலுள்ள அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளா் த.உதயச்சந்திரன், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் பி.அமுதா, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT