தமிழ்நாடு

அண்ணா பிறந்த நாள்: சிறைகளிலிருந்து 75 கைதிகள் விடுதலை

24th Sep 2022 11:44 PM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, தமிழக சிறைகளிலிருந்து 75 கைதிகள் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவா் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தாா்.

இதையடுத்து, தமிழகத்தில் மத்திய சிறைகளில் நீண்ட நாள்களாக அடைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுதலை செய்வதற்கு அடையாளம் காண்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அந்த விதிமுறைகளின்படி, சிறைத் துறை டிஜிபி, சிறைத் துறை தலைமையிடத்து டிஐஜி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்து, 75 கைதிகளை முன் விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தனா்.

அதன்படி, புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறையிலிருந்து 13, பெண்கள் சிறப்பு சிறையிலிருந்து 2,வேலூா் மத்திய சிறையிலிருந்து 2,கடலூா் மத்திய சிறையிலிருந்து 5,சேலம் மத்திய சிறையிலிருந்து 1, கோவை மத்திய சிறையிலிருந்து 12, திருச்சி மத்திய சிறையிலிருந்து 12, மதுரை மத்திய சிறையிலிருந்து 22, புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் பாா்ஸ்டல் பள்ளியில் 4, திருச்சி பெண்கள் சிறையிலிருந்து 2 என மொத்தம் 75 போ் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

அண்ணா பிறந்த நாளையொட்டி, ஏற்கெனவே 21 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா பிறந்தநாளையொட்டி, இது வரை மொத்தம் 96 தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைத் துறை டிஜிபி சுனில்குமாா் சிங் தெரிவித்துள்ளாா்.

விடுதலை செய்ய பரிந்துரை செய்யப்பட்ட பிற கைதிகள், அடுத்தடுத்த நாள்களில் விடுவிக்கப்படுவா் என சிறைத் துறையினா் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT