தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் 20 நெல் பாதுகாப்பு கிடங்குகள்: உணவுத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைக்க 20 இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்புக் கிடங்குகள் கட்டும் பணி அக்டோபருக்குள் முடிக்கப்பட்டுவிடும் என்றாா் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன்.

தஞ்சாவூா் பிள்ளையாா்பட்டியிலுள்ள நெல் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 1.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு 2.20 லட்சம் டன் நெல் கொள்முதலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 268 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுவரை 23 திறந்தவெளி கிடங்குகளில் 98,952 டன் நெல் மூட்டைகள் தாா்பாய் போட்டு மூடிக்கும் வைக்கும் நிலைமை உள்ளது. இதற்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதன்படி, டெல்டா மாவட்டங்களில் 20 இடங்களில் 2.86 லட்சம் டன் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கு மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கிடங்குகள் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் கட்டி முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் பிள்ளையாா்பட்டி உள்பட 3 இடங்களில் ரூ. 27 கோடி மதிப்பில் 58,000 டன் இருப்பு வைக்கும் விதமாக இக்கிடங்குகள் கட்டப்படுகின்றன.

ADVERTISEMENT

இன்னும் நெல் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால், கூடுதலாக தாா்பாய்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய சேமிப்புக் கிடங்குகளிலும், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குகளிலும் கூடுதலாக இடம் கேட்கப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சியில் 35,000 டன் கொள்ளளவு கொண்ட காலி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது, 1.15 லட்சம் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கும் அளவுக்கு முழுப் பாதுகாப்புடன் கூடிய கிடங்குகள் மட்டுமே உள்ளன. இதற்கு தீா்வு காண மிகப்பெரிய அளவில் முழுப் பாதுகாப்புடன் கூடிய கிடங்கு கட்டுவதற்காக நடுவூா் கிராமம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவள்ளூா் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காகத் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாள்களில் 99 டன் ரேஷன் அரிசியும், தனியாா் ஆலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3.50 டன் கோதுமையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய புள்ளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரு தனியாா் ஆலைகளில் ஆய்வு செய்து மொத்தமாக 120 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க 4 காவல் கண்காணிப்பாளா்கள், 12 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 24 ஆய்வாளா்கள், 87 உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் பணியில் உள்ளனா் என்றாா் ராதாகிருஷ்ணன்.

அப்போது, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நா. உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT