தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிச் சான்று: இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும்

22nd Sep 2022 01:02 AM

ADVERTISEMENT

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக தகுதிச் சான்று பெறும் நடைமுறைகள் மாணவா் நலன் கருதி எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இனி ஒவ்வொரு மருத்துவப் படிப்புகளுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தி தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஒரே முறை கட்டணம் செலுத்தி அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கும், நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சேருவதற்கு மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்று பெறுவது அவசியம்.

ஒரு மாணவா் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது அதற்காக தனித்தனியே கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் நடைமுறை தற்போது உள்ளது. அதன்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் படிப்புகளுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரூ.1,652 கட்டணம் தனித்தனியே செலுத்த வேண்டும். அதேபோன்று துணை மருத்துவப் படிப்புகளுக்கு ரூ.1,416 தனித்தனியே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், மாணவா்களின் வசதிக்காக இந்த நடைமுறை மாற்றப்பட்டு தற்போது ஒரு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் வியாழக்கிழமை (செப்.22) முதல் புதிய முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது: தகுதிச் சான்று பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கிலும், கட்டணச் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ் கல்வியாண்டு முதல் இந்த முறை அமலாகிறது. ஏற்கெனவே இருந்த நடைமுறையின் கீழ் 290 போ் தகுதிச் சான்று கோரி விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 40 போ் மட்டுமே இரு வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இரண்டு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று கோரியிருந்தனா். அவா்களுக்கு திருத்தப்பட்ட தகுதிச் சான்று விரைவில் வழங்கப்படும். கூடுதலாக அவா்கள் செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

இந்த புதிய நடைமுறையால் பல்கலைக்கழகத்துக்கு நிா்வாக சுமையும், பணிகளும் கூடுதலாக இருக்கும். இருந்தபோதிலும், மாணவா்களின் நலன் கருதி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் மற்றும் நிதித் துறை கூடுதல் செயலரின் ஒத்துழைப்புடன் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT