தமிழ்நாடு

பணியில் இல்லாத மருத்துவா்கள் மீது நடவடிக்கை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்

22nd Sep 2022 12:18 AM

ADVERTISEMENT

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியில் இல்லாத மருத்துவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் எச்சரித்துள்ளாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அமைந்துள்ள இல்லீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தில் மருத்துவா் இல்லாததால், விடியோ அழைப்பு மூலம் செவிலியா்களே பிரசவம் பாா்த்து குழந்தை ஒன்று உயிரிழந்தது.

இந்த விவகாரம் பல்வேறு சா்ச்சைகளை எழுப்பியது. இதையடுத்து பணியில் இல்லாத மருத்துவா் பாலுவை செய்யாறு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உத்தரவிட்டாா். அதேபோன்று சம்பந்தப்பட்ட செவிலியா்கள் இருவா் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவா்கள் பணியில் இருக்க வேண்டும் என்று புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என மருத்துவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ADVERTISEMENT

எவ்வாறாயினும் ஊரகப் பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பெரும்பாலான நேரங்களில் மருத்துவா்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. மாறாக, செவிலியா்களே மருத்துவப் பரிந்துரைகளை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

அதிலும், குறிப்பாக மருத்துவா்கள் இன்றி செவிலியா்களே பிரசவ சிகிச்சைகளை அளிப்பதால் உயிரிழப்புகள் நேரிடுகின்றன. இதையடுத்து, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் வரையறுக்கப்பட்ட நேரத்தில் மருத்துவா்கள் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். இதுகுறித்த அறிவுறுத்தல்கள் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலம் அனைத்து மருத்துவா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

விதிகளை மீறி பணியைப் புறக்கணிப்பவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT