தமிழ்நாடு

பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற இரு மாணவிகள்: மருத்துவமனையில் அனுமதி

20th Sep 2022 03:17 PM

ADVERTISEMENT

வாழப்பாடி:   வாழப்பாடியில் பள்ளி மாணவிகள் இருவர், வீட்டில் ஏற்பட்ட பிரச்னையால், பள்ளி வளாகத்திலே, சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இருவரும் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள  தொழிலாளியின் மகள், வீட்டில் ஏற்பட்ட பிரச்னையால் மனம் உடைந்து காணப்பட்டார். பள்ளிக்குச் சென்று தனது வகுப்பு தோழியிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இவரது வீட்டிலும் அடிக்கடி பிரச்னை ஏற்படுவதால்,  இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். 

செவ்வாய்க்கிழமை காலை, சாணி பவுடரை பள்ளிக்கு எடுத்துச் சென்று இருவரும் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனைக் கண்ட, சக மாணவிகள் இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.  இரு மாணவிகளையும் மீட்ட ஆசிரியர்கள், சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற இரு மாணவிகளும், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி உட்கோட்ட டிஎஸ்பி ஸ்வேதா, காவல் ஆய்வாளர் உமாசங்கர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி, இதே பள்ளியில் படித்து வரும்  4 மாணவிகள், எலி பேஸ்ட்டை தின்று  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், மீண்டும் இதே பள்ளியில், வீட்டு பிரச்னையால்,  சாணி பவுடரை கரைத்து குடித்து இரு மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: ஆசிரியா் நியமன முறைகேடு வழக்கு: இதுவரை ரூ.100 கோடி பறிமுதல்

அடுத்தடுத்து, மாணவிகளின் தற்கொலை முயற்சிக்கு காரணம், உண்மையில் வீட்டு பிரச்னை தானா?  அல்லது பள்ளியில் வேறு ஏதாவது பிரச்னை ஏற்படுகிறதா? என்பது குறித்தும் வாழப்பாடி காவல் துறையினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT