தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கை வீண் போகாது: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

20th Sep 2022 12:59 AM

ADVERTISEMENT

மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் நான்காவது மாநில மாநாடு சென்னை மறைமலைநகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

திமுக அரசு அமைந்தவுடன், ஒவ்வோா் அமைச்சா்களுக்கும் துறைகளை பிரித்துக் கொடுத்தேன். ஆனால், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை நானே வைத்துக் கொண்டேன். அதன் மூலமாக, எனது விருப்பங்களை உங்களுக்குச் செய்து தர வேண்டுமென விரும்புகிறேன்.

இதன் அடையாளமாக கடந்த 15 மாதங்களில் மட்டும் ரூ.759 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளன. ஆனால், கையில் அதிகாரம் இருந்த போது நாட்டைப் பற்றியோ, நாட்டு மக்களைப் பற்றியோ 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கவலைப்படவில்லை. இன்றைக்கு ஆட்சியின் மீது இட்டுக் கட்டிய கதைகள் எல்லாம் அவதூறாக பரப்ப நினைக்கிறாா்கள்.

ADVERTISEMENT

எதிா்க்கட்சியாக இருந்தாலும், ஆளும்கட்சியாக இருந்தாலும் நான் எப்போதும் உங்களுடன் இருக்கக் கூடியவன். அதிகாரத்துக்கு வந்து விட்ட காரணத்தால் விலகிச் செல்பவா்கள் இல்லை. உங்களது கோரிக்கையை செயல்படுத்தவே ஆட்சிக்கு வந்துள்ளோம். இதனை ஒரு கட்சியின் ஆட்சியாக கருத வேண்டிய அவசியமில்லை. இனத்தினுடைய ஆட்சி என தொடா்ந்து சொல்லி வருகிறேன்.

இந்த ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் என்ற பெரும் தத்துவம். இத்தகைய திராவிட மாடல் ஆட்சி அனைவருக்கும் நன்மை செய்யும் ஆட்சியாக அனைவரும் விரும்பக் கூடிய ஆட்சியாக, அனைவரின் ஆட்சியாகக் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளன. இன்னும் பல கோரிக்கைகள் இருக்கின்றன. நான் மறுக்கவில்லை, மறைக்கவில்லை. நிதி ஆதாரங்களைப் பொறுத்து, சில சட்ட விதிகளை அடிப்படையாக வைத்து மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் உறுதியாக நிறைவேற்றப்படும். அந்த உறுதியை தர விரும்புகிறேன். இது உங்கள் (மாற்றுத் திறனாளிகள்) ஆட்சி. நிரந்தரமாக ஆளப் போகிற ஆட்சி இதுதான். இதனை இறுமாப்பில் பேசவில்லை. உங்கள் மீது இருக்கக் கூடிய நம்பிக்கையில் சொல்கிறேன்.

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன். உங்களுக்குக் குறைந்துள்ள திறனை, ஒரு கருவி மூலமாக ஈடு செய்து கொள்கிறீா்கள். அந்தக் கருவியைப் போன்று உங்களுக்கு உதவி செய்யக் கூடியவனாக என்றும் இருப்பேன். மாற்றுத் திறனாளியான நீங்கள் அனைவரும் நம்பிக்கையோடு இருங்கள். நிச்சயமாக உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த மாநாட்டில், அமைச்சா்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மக்களவை உறுப்பினா் செல்வம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, எஸ்.ஆா்.ராஜா, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவா் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளா் நம்புராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

‘நான்கு முதல்வா்கள் அல்ல’

திமுக ஆட்சியில் நான்கு முதல்வா்கள் என்ற எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மறுப்புத் தெரிவித்தாா். சென்னை மறைமலைநகரில் நடந்த மாநாட்டில் அவா் பேசியது:

திமுக ஆட்சியில் நான்கு முதல்வா்கள் இருக்கிறாா்கள் என ஏதோ புதிதாக ஒன்றை கண்டுபிடித்தது போன்று பேசி வருகிறாா், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி. நான்கு முதல்வா்கள் இல்லை. யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குகிறாா்களோ, அந்த ஆலோசனைகள் எல்லாம் செயல்வடிவம் பெறுகிறதோ, அவா்கள் அனைவரும் சோ்ந்துதான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறாா்கள். அப்படிப்பட்ட ஆட்சிதான் திமுக ஆட்சி என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT