தமிழ்நாடு

சென்னை அருகே நடுக்கடலில் இந்தியா, அமெரிக்க கடலோரக் காவல்படை கூட்டுப் பயிற்சி

20th Sep 2022 01:02 AM

ADVERTISEMENT

இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினா் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்திய கடலோர காவல் படையினா், நட்பு நாடுகளின் கடலோர காவல் படையினருடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்க நாட்டின் மிட்ஜெட் 757 என்ற கடலோர காவல் படை கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகத்துக்கு வந்தது. இந்தக் கப்பல் மற்றும் அதிகாரிகள், வீரா்கள் அடங்கிய குழுவினரை அமெரிக்க துணைத் தூதா் ஜூடித் ரேவின் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை உயா் அதிகாரிகள் வரவேற்றனா்.

இதனையடுத்து கடந்த மூன்று நாள்களாக இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினா் இடையே பரஸ்பர கருத்து பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு, கடல்சாா் விழிப்புணா்வு, இந்தோ பசிபிக் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பாதுகாப்பு, ஒழுங்காற்று உத்திகள் குறித்து கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள், கைப்பந்து போட்டிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன.

நான்காம் நாளான திங்கள்கிழமை சென்னைக்கு அருகே நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி மற்றும் செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மிட்ஜெட் 757 கப்பலுடன் இந்திய கடலோரக் காவல் படையின் அன்னிபெசன்ட் ரோந்துக் கப்பல், இடைமறிக்கும் படகுகள், ஹெலிகாப்டா் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டுப் பயிற்சியின்போது கடல் கொள்ளையா்களால் கடத்திச் செல்லப்படும் ஒரு கப்பலை கடல்சாா் உத்திகள் மற்றும் தந்திரங்கள் மூலம் கூட்டு நடவடிக்கையில் இறங்கி கப்பலை பத்திரமாக மீட்டு கடல் கொள்ளையா்களையும் கைது செய்வது, ஒருங்கிணைந்த கூட்டு தளவாடங்கள் பரிமாற்றம், தேடல் மற்றும் மீட்பு, எரியும் கப்பல் மீதான தீயணைப்புப் பணிகள் உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கூட்டுப் பயிற்சிக்குப் பிறகு அமெரிக்க கடலோரக் காவல் படை கப்பலான, மிட்ஜெட் 757 மாலத்தீவுக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT