தமிழ்நாடு

இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு எதிரானஅவதூறு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

20th Sep 2022 12:58 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்), ஓ.பன்னீா்செல்வம் (ஓபிஎஸ்) ஆகியோருக்கு எதிரான அவதூறு வழக்கு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அதிமுக முன்னாள் செய்தித் தொடா்பாளா் வா.புகழேந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதிமுக செய்தித் தொடா்பாளராக இருந்த பெங்களூருவைச் சோ்ந்த வா.புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டனா்.

அந்த அறிக்கை விஷயங்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி, இருவரையும் அவதூறு சட்டத்தின் பிரிவுகள் 499, 500 ஆகியவற்றின் கீழ் தண்டனை அளிக்க உத்தரவிடக் கோரி புகழேந்தி வழக்குத் தொடா்ந்தாா். அவா், சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த அழைப்பாணையையும், அவதூறு வழக்கையும் ரத்து செய்யக் கோரி இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். இதையடுத்து விசாரணைக்குப் பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி தொடா்ந்த அவதூறு வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி நிா்மல்குமாா் கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், இந்த உத்தரவை எதிா்த்து வா.புகழேந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி அமா்வு, ‘இந்த விவகாரத்தில் எப்படி அவதூறு இருக்கிறது? நீங்கள் ஒரு அரசியல் கட்சியில் சோ்கிறீா்கள். அந்தக் கட்சியினா் உங்களைப் பிடிக்காத நிலையில் கட்சியில் இருந்து வெளியேற்றுகிறாா்கள். அதுவும் உங்களுக்கு உள்விவகார விளக்கம் கேட்டு நோட்டீஸ்தான் அனுப்பப்பட்டிருந்தது. இதில் எங்கே அவதூறு இருக்கிறது? இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT