தமிழ்நாடு

துறையூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - பீதியில் மக்கள்

18th Sep 2022 10:28 AM

ADVERTISEMENT

 

துறையூர்: துறையூர் சின்ன ஏரியில் செத்து மிதக்கும் மீன்களாலும், துர்நாற்றத்தாலும் நகர மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

துறையூர் பேருந்து நிலையம் எதிரே சின்ன ஏரி உள்ளது. இதன் கிழக்கு கரையோரம் துறையூர் நகரின் முக்கிய சாலையும், சாலையின் இருபுறமும் கடைகள் உள்ளன. பேருந்து நிலையம் எதிரே ஆட்டோ, சுற்றுலா வேன், கார்கள், சுமையேற்றும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் சின்ன ஏரியின் கிழக்கு கரைப் பகுதியானது, துறையூர் நகரின் வணிக மற்றும் போக்குவரத்து பயன்பாடு காரணமாக பரபரப்பாக இயங்குகிறது. அதனால் சின்ன ஏரி  துறையூரின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 

ஆயினும், சின்ன ஏரி அதன் இயல்பு மாறி பெரிய கழிவு நீர் தொட்டியாகவும், குப்பைக் கொட்டும் கிடங்காகவும் மாறி துர்நாற்றத்துடன் காண்போரை முகம் சுழிக்கச் செய்யும் வகையில் இருக்கிறது. எனவே, நகர்மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் முதல் எம்எல்ஏ, எம்.பி தேர்தல் வரை சின்ன ஏரியை தூர்வாறி தூய்மைப்படுத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதி அனைத்துக் கட்சிகளுக்கும் அதன் வேட்பாளர்களும் பாரபட்சமின்றி பல தேர்தல்களில் வாக்குறுதியாக உள்ளது. தேர்தலுக்கு பின்னர் நிலைமை மாறாமல் நாளுக்கு நாள் மிக மோசமடைவருகிறது என்பதே கள உண்மையாகும்.

ADVERTISEMENT

இந்த நிலையில் சனிக்கிழமை(செப். 17) மாலை முதல் துறையூர் சின்ன ஏரியில் பெரிய பெரிய மீன்கள் செத்து மிதக்கின்றன. ஏற்கனவே கழிவு நீர் துர்நாற்றத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள், தற்போது மீன் செத்து அழுகி வீசும் துர்நாற்றத்தால் மூச்சு விட முடியாமலும், திருச்சி சாலையில் செல்லும் மக்கள் மூக்கை விரல்களால் பிடித்தப்படி செல்கின்றனர்.

மேலும், ஏரி நீரில் வாழும் மீன்கள் இறந்து மிதப்பதால், விஷமாக மாறிவிட்ட ஏரியின் கழிவு நீரின் தன்மை குறித்தும் மக்கள் பீதியடைந்துள்ளனர். மீன்களுக்கு ஏற்பட்ட நிலை நகர மக்களுக்கு ஏற்படுவதற்கு முன்பு சின்ன ஏரியை முறையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நிறுவனங்களை அச்சுறுத்தும் ‘நிலவு வெளிச்சம்’!

சின்ன ஏரியை தூய்மை செய்வோம் என்பது தேர்தல் வாக்குறுதியாக இனியும் தொடராமல், மக்கள் பிரதிநிதிகளும், நகராட்சி பொதுப்பணி வருவாய் என தொடர்புடைய அனைத்து அரசுத்துறை அதிகாரிளும், அரசின் கவனத்துக்கு துரிதமாக கொண்டுச் சென்று போர்க்கால அடிப்படையில் சின்ன ஏரியையும் அதற்கான நீர் வரத்து வாய்க்காலையும் தூர் வாரி தூய்மைப்படுத்தவும், கழிவு நீர் நேரடியாக சின்ன ஏரியில் கலப்பதை தடுக்கும் வகையில் உரிய இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான உரிய நடவடிக்கையை மக்கள் நலன் கருதி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏரியிலும், நீர் வரத்து வாய்க்காலிலும் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

பல ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்திற்கு சின்ன ஏரி நீர் பயன்பட்டது போல, மீண்டும் சின்ன ஏரி நீரைப் பயன்படுத்தி அதன் மேற்குப் பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் வேளாண்மை சாகுபடி செய்ய வசதியாக சின்ன ஏரியை தூய்மைப்படுத்த அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

இல்லாவிடில் சின்ன ஏரியை நம்பி விவசாயம் நடைபெற்ற நிலங்கள் அனைத்தும் வீடுகளாக, கட்டடங்களாக மாறிவிடும் சூழல் ஏற்படும். அப்போதும் கூட அங்குள்ள மக்களுக்கும் சின்ன ஏரியும் அதிலுள்ள கழிவு நீரும், துர்நாற்றமும் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதே நிதர்சனமானமாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT