தமிழ்நாடு

சிற்பியைப் போல மாணவர்களை செதுக்கியாக வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

14th Sep 2022 12:57 PM

ADVERTISEMENT

சிற்பியைப் போல நாம் மாணவர்களைச் சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை நல்வழிப்படுத்தும் சென்னை மாநகரக் காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

‘காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவு(சிற்பி)’ திட்டத்தை ரூ. 4.25 கோடி மதிப்பில் சென்னை மாநகராட்சியின் 100 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ADVERTISEMENT

சிறார் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்புக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சிறார் குற்றச் செயல்களில் ஈடுபட, குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய குடும்ப வருமானம் இல்லாமை, ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவை பெரும்பாலும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

இவற்றைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமாக, சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கிறதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது.

வளர்ச்சி என்பது ஒரு பக்கத்திலே இருந்தாலும் இன்று ஒரு பக்கத்திலே சில சமூகப் பிரச்சனைகள் அதிகமாகி வருவதை நாம் கவனித்தாக வேண்டும், அதைத் தடுத்தாக வேண்டும்.

போதைப் பொருள் ஒழிப்பு, குடிப்பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பெறச் செய்தல், அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பினை ஏற்படுத்துதல், சுய ஆளுமைத் திறனை மேம்படுத்துதல், பெற்றோர்களது பேச்சை மதித்து நடத்தல், பொதுமக்களோடு தொடர்பு, இளம் வயதிலிருந்து போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க செய்தல், மாநிலத்தின் செழுமை மற்றும் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளச் செய்தல் ஆகிய பண்புகளை சிறார்களிடையே உருவாக்கியாக வேண்டும்.

இப்படி உருவாக்கப்படும் மாணவர்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக தலைசிறந்து விளங்குவார்கள். அதாவது சிற்பியைப் போல நாம் மாணவர்களைச் சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும். இதுகுறித்து காவல்துறையின் உயரதிகாரிகளிடம் நான் சில தகவல்களைக் கேட்டேன். இந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டேன்.

இந்தச் செயல் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 100 பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலக்கூடிய 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவ, மாணவியர்கள் அப்பள்ளியில் உள்ள இரு ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் முன்னிலையில் கூடுவார்கள்.

மாணவ, மாணவியர்களுக்கான வகுப்புகளைக் காவல்துறை அதிகாரிகளும் துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களும் நடத்துவார்கள். இதுதொடர்பாக மாணவ, மாணவியர்களுக்குப் புத்தகம் ஓன்று வழங்கப்படும்.

இந்த வகுப்புகள் நடைபெறும் தருணங்களில் மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகள் வழங்கப்படும். மேலும், இம்மாணவ, மாணவியர்கள் நிர்ணயிக்கப்பட்ட 8 இடங்களுக்குச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் என்னிடத்தில் சொன்னார்கள். இங்கே நீங்கள் படக்காட்சியாக
தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதைக் கேட்டபோது எனக்கு மனநிறைவு அளிப்பதாக இருந்தது.

நம்முடைய சிறுவர்களைச் சமூக ஒழுக்கங்களோடு வளர்த்தெடுக்க வேண்டியது நம்முடைய கடமை! அவர்களை சிறப்பாகச் செதுக்கியாக வேண்டும். அப்படி உருவாகும் இளைஞர்கள் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவார்கள், செதுக்குவார்கள். இந்தப் பயிற்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் இருக்கக் கூடாது.

அவர்களது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் நடக்கக்கூடாது. எந்தவிதமான புகாரும் வராமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன். நல்லொழுக்கம் கொண்டவர்களாக அவர்களை வளர்ப்பதன் மூலமாக நல்ல தலைமுறைகளை உருவாக்குவோம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT