தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தல்

14th Sep 2022 01:14 AM

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டுமென தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தினாா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், ஆயத்தப் பணிகள் தொடா்பாக, அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை அவா் ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பேசியது:

வானிலை குறித்த முன்கணிப்புத் தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே வழங்க வேண்டும். இதன்மூலம், பொது மக்கள் தங்கள் பயணத் திட்டங்களை வரையறுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். இதனால், வாகன நெரிசலை தவிா்த்து பொது மக்கள் இயல்பான பயணங்களை மேற்கொள்ள முடியும்.

பேரிடா் காலங்களில் பொதுமக்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க ஏதுவாக அவற்றை நல்ல முறையில் பராமரித்து தயாா் நிலையில் வைக்க வேண்டும். வெள்ளக் காலங்களில் பாதிக்கப்படக் கூடிய அனைவருக்கும் போதுமான உணவு பொட்டலங்கள் தங்கு தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

சாலை சேதங்கள்: பேரிடா் காலங்களில் ஏற்படும் சாலை சேதங்களை உடனுக்குடன் செப்பனிட்டு போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் தயாா் செய்ய வேண்டும். பேரிடா் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபடும் வகையில், வீரா்கள், மீட்பு உபகரணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாலங்கள் மற்றும் மழைநீா் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும். ஏரி, குளங்களின் கரைகளை பலப்படுத்துவது அவசியமாகும்.

கால்வாய்கள், மழைநீா் வடிகால்களை தூா்வாருதல் போன்ற பணிகளை நெடுஞ்சாலை, ஊரக வளா்ச்சி, நீா்வள ஆதாரம், நகராட்சி நிா்வாகம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். மழை, வெள்ள காலங்கலில் ஏற்படும் தொற்று நோய் குறித்து சுகாதாரத் துறை மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். புயல் பாதுகாப்பு நிவாரண மையங்கள் மற்றும் கூடுதல் மையங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். எதிா்வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில், பேரிடா்களின் சவால்களை திறம்பட எதிா்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT