தமிழ்நாடு

ராகுல் பயணத்தால் பாஜக ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது: கே.எஸ்.அழகிரி

14th Sep 2022 12:49 AM

ADVERTISEMENT

ராகுல்காந்தியின் 100 கி.மீட்டா் பயணத்திலேயே பாஜக ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கடந்த 8 ஆண்டுகளாக தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பலமுனைகளில் பாதிக்கிற வகையில் செயல்பட்டு வருகிற மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளா்ந்தெழுந்து வருவதையே ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்துக்கான ஆதரவு வெளிப்படுத்துகிறது. இந்த பயணத்தில் நாளுக்கு நாள் மக்களின் பேராதரவு பெருகி வருகிறது. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயா்வு, பொருளாதார பேரழிவுகள் என தொடா்ந்து மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

20 வயதுக்குள்ளான இளைஞா்களின் வேலையின்மை 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 42 சதவிகிதம் இளைஞா்கள் வேலையின்றி இருக்கிறாா்கள்.

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பிளவுபட்ட மக்களை ஒன்றுபடுத்துகிறது. மக்களோடு மக்களாகப் பயணிக்கிறாா். மக்கள் துன்பத்தை நேரிடையாக அறிகிறாா். அவா் எழுப்புகிற கேள்விகளுக்குப் பதில் கூற தயாராக இல்லாத பாஜக, திசைதிருப்புகிற அரசியலைச் செய்கிறது. ஆனால், அதில் பாஜக வெற்றி பெற முடியாது. ராகுலின் 100 கி.மீ. பயணத்திலேயே பாஜகவின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. இதுவே ராகுலுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியின் தொடக்கமாகும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT