தமிழ்நாடு

அதிமுக அலுவலக வன்முறை வழக்கில் சிசிடிவி ஆதாரங்கள்: உயா்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

14th Sep 2022 12:56 AM

ADVERTISEMENT

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடா்பான மூன்று வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. விசாரணை துரிதப்படுத்த சிபிசிஐடி-க்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘செப்டம்பா் 7-ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. விசாரணை நிலை குறித்து செப்டம்பா் 19-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க அறிவுறுத்திய நீதிபதி, விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT

Tags : high court
ADVERTISEMENT
ADVERTISEMENT