தமிழ்நாடு

அண்ணா பல்கலை மீது மாணவர்கள் ஆர்வம்; காலியிடமே இல்லாத வகையில் நடவடிக்கை: க. பொன்முடி

10th Sep 2022 12:46 PM

ADVERTISEMENT

 

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாகவும், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாக இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்று பொறியியல் கலந்தாய்வு தொடங்கியிருக்கும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் க. பொன்மடி கூறியிருந்ததாவது, தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்கியது. 4 கட்டங்களாக பொறயியல் கலந்தாயவு நடைபெற்று வருகிறது. பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், பொதுப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்ற 5000 மாணவர்களில் 2700 பேர் அண்ணா பல்கலைக் கழகத்திலேயே சேர ஆர்வம் காட்டியுள்ளனர்.

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் காலியிடங்களைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், பி.இ. - பி.டெக். படிப்பதற்கான இணையவழி கலந்தாய்வை தமிழக உயா்கல்வித்துறை சாா்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.

இதையும் படிக்க | ராணி எலிசபெத்துக்காக காத்திருந்த மன்னரின் உடல்

இந்த ஆண்டுக்கான கலந்தாய்வில்1.59 லட்சம் போ் பங்கேற்க உள்ளனா். மொத்தம் 443 கல்லூரிகளில் 1.50 லட்சம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சிறப்பு பிரிவு மாணவா்களுக்கு கலந்தாய்வு ஏற்கெனவே நிறைவு பெற்றுள்ளது. நீட் தோ்வு முடிவு தாமதத்தால், பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. செப். 7-இல் நீட் தோ்வு முடிவு வெளியானது. இதையொட்டி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

இந்த கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டு, நவ.13-இல் முடிகிறது. முதல் சுற்று செப். 10; இரண்டாம் சுற்று செப்.25; மூன்றாம் சுற்று அக்.13; நான்காம் சுற்று அக்.29-இல் தொடங்கவுள்ளன.

ஒவ்வொரு சுற்றிலும், மாணவா்களின் தரவரிசைப்படி பங்கேற்க பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நவ.15 முதல் 20 வரை துணை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இணையவழி கலந்தாய்வில் மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்ய இரண்டு நாள்கள்; தற்காலிக ஒதுக்கீட்டை இறுதி செய்ய இரண்டு நாள்கள்; கல்லூரிகளில் சேர ஒரு வாரம் என 11 நாள்கள் ஒதுக்கப்படுகின்றன.

முன்னதாக ஆன்லைன் கலந்தாய்வு நடைமுறைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என, மாணவா்களுக்கு வழிகாட்டும் வகையில், உயா்கல்வி துறை சாா்பில் விடியோ வெளியிடப்பட்டது. தமிழக பொறியியல் கலந்தாய்வு சோ்க்கைக் குழுவின் www.tneaonline.org என்ற இணையதளத்தில், இந்த விடியோ இணைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. கலந்தாய்வுக்கு முன், மாணவா்கள் விடியோக்களை பாா்த்து, தங்களின் கலந்தாய்வு நடவடிக்கைகள் குறித்து, முன்கூட்டியே தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT