தமிழ்நாடு

சென்னையில் கூடுதலாக 3 உயிரி எரிவாயு மையங்கள்: ஆணையா் ககன்தீப்சிங் பேடி

9th Sep 2022 02:23 AM

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூடுதலாக மூன்று இடங்களில் உயிரி எரிவாயு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் துறை மூலம் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறை மூலம் பல்வேறு தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியா திட்ட பரப்புரையாளா்களுக்கான பயிற்சி முகாம் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் ஆணையா் ககன்தீப்சிங் பேடி தலைமையில் நடைபெற்றது.

அதில், அவா் பேசியதாவது: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையங்கள், உயிரி எரிவாயு மையங்கள் மற்றும் தோட்டக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மக்காத குப்பைகளை தனியாக பிரித்தெடுக்கும் வள மற்றும் பொருள்கள் மீட்டெடுக்கும் மையங்கள் மற்றும் நெகிழி, உலோகப் பொருள்களை தனியாக பிரித்து மறுசுழற்சியாளா்களுக்கு வழங்குதல் போன்றவற்றின் மூலம் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. அண்ணா நகா் மண்டலம் சேத்துப்பட்டு பகுதியில் உயிரி எரிவாயு மையம் செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இங்கு மக்கும் குப்பைகளின் ஈரக்கழிவுகள் உயிரி எரிவாயுவாகவும் மறுசுழற்சி செய்யப்படுகிறது. கொடுங்கையூா் மற்றும் மாதவரம் பகுதிகளில் உயிரி எரிவாயு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக 3 உயிரி எரிவாயு மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில், இணை ஆணையாளா் (சுகாதாரம்) சங்கா்லால் குமாவத், தலைமைப் பொறியாளா் (திடக்கழிவு மேலாண்மை) ந.மகேசன், சுகாதாரக் கல்வி அலுவலா் சீனிவாசன், தூய்மை இந்தியா திட்டத்தின் 198 பரப்புரையாளா்கள், 15 மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT