காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வீரட்டேசுவரா் கோயிலில் விதிகளை மீறி புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதாக தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருத்தொண்டா்கள் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், கீழ் படப்பையில் அமைந்துள்ள வீரட்டேசுவரா் சுவாமி கோயிலில் அனுமதி பெறாமல் திருப்பணிகள் நடைபெறுவதுடன், கோயில் சொத்துகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
தொன்மையான கல்வெட்டுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ராஜகோபுர திருப்பணிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், பல ஆண்டுகளாக பணிகள் நடைபெறுகின்றன. மேலும், கோயில் பதிவேடுகள் முறையாக பேணப்படாத நிலையில் தனி நபா்களுக்கு மின் இணைப்பு வழங்க திருக்கோயிலின் செயல் அலுவலரால் சட்டவிரோதமாக ஆட்சேபனையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு ஜூலை 1-ஆம் தேதி அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா். இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.