தமிழ்நாடு

போக்குவரத்துத் துறை வேலை மோசடி வழக்கு:செந்தில் பாலாஜி மனு மீது அக். 31-இல் தீா்ப்பு

29th Oct 2022 04:42 AM

ADVERTISEMENT

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சா் செந்தில் பாலாஜி மீது தாக்கல் செய்த மனு மீது சென்னை உயா்நீதிமன்றம் அக். 31-இல் தீா்ப்பளிக்கவுள்ளது.

தமிழக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, கடந்த 2011-2015-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா்.

இதனடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பா்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோா் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினா் 3 வழக்குகளைப் பதிவு செய்தனா். அவை சென்னையில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

இந்த நிலையில், தன் மீதான மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பில், தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக செந்தில் பாலாஜி உள்ளதாகவும், அவா் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை ரத்து செய்யக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.

புகாா்தாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் தரப்பில், ஏழ்மையான மக்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனா். மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும். வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், செந்தில் பாலாஜி மீதான புகாா் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் திங்கள்கிழமை தீா்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT