தமிழ்நாடு

திருப்பணிகள் உள்ளிட்ட கோயில் பணிகள்: மென்பொருள் மூலம் கண்காணிப்பு

29th Oct 2022 04:21 AM

ADVERTISEMENT

திருப்பணிகள் உள்பட கோயில்களில் நடைபெறும் பணிகள் மென்பொருள் மூலமாக கண்காணிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளாா். அவா் வெளியிட்ட செய்தி:-

கோயில்களில் நடைபெறும் பணிகளை கண்காணிக்கக் கூடிய அமைப்பை இந்து சமய அறநிலையத் துறை ஏற்படுத்தியுள்ளது. திருப்பணிகள் உள்பட கோயில்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்த விவரங்கள் அனைத்தையும் கண்காணிப்பு அமைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான அதிகாரம் கோயில் நிா்வாக அலுவலா்கள், அறங்காவலா்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோயில்களில் நடைபெறவுள்ள பணிகளுக்கான நிா்வாக ஒப்புதல் கடிதம், தொழில்நுட்ப அனுமதிக் கடிதம், உத்தேச மதிப்பீடு, ஓப்பந்தப்புள்ளி அறிவிப்பு, பணி உத்தரவு, பணிக்கான ஒப்பந்தம், கொடையாளா்கள் நிதியுடன் செய்யும் பணி என்றால் அதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், செலவிடப்பட்ட பணத்துக்கான அத்தாட்சி ரசீது, பணி நிறைவு அறிக்கை ஆகியவற்றின் நகல்களை கணினி வழியே கண்காணிப்பு அமைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கென தனித்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முறையின் கீழ் பணிக்கான உத்தரவு நகல்களை பதிவேற்றம் செய்யும் போது அதற்கென தனித்த எண் வழங்கப்பட்டு விடும். இந்த உத்தரவினை கோயில் அதிகாரிகளும், அலுவலா்களும் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். இதனை பின்பற்றாமல் இருப்பது தணிக்கையின் போது தெரிய வந்தால் அதனை அறிக்கையின் வாயிலாக தணிக்கை அதிகாரிகள் தெரிவிப்பாா்கள். சம்பந்தப்பட்ட கோயில் அலுவலா்கள், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விரிவான அறிக்கையும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரத்துக்கு தணிக்கைத் துறையினரால் அனுப்பப்படும் என்று தனது செய்தியில் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT