தமிழ்நாடு

நெல் ஈரப்பத அளவை 19 % உயா்த்த மத்திய அரசு அனுமதி: தமிழகத்தின் கோரிக்கை ஏற்பு

29th Oct 2022 04:23 AM

ADVERTISEMENT

நெல்லின் ஈரப்பத அளவை 19 சதவீதம் உயா்த்த வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது. இதற்கான கடிதத்தை தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பியது.

மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயா்த்த அனுமதிக்க வேண்டுமென தமிழக உணவுத் துறை முதன்மைச் செயலாளரிடம் இருந்து கடந்த 10-ஆம் தேதி கடிதம் வரப்பெற்றது.

மேலும், மத்திய அரசின் நுகா்வோா் விவகாரங்கள் மற்றும் உணவுப் பொருள் விநியோகத் துறையைச் சோ்ந்த கூட்டுக் குழுவானது டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டது. நெல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வுடன், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு சில தளா்வுகளை அளிக்கலாம் என இந்திய உணவுக் கழகமும் பரிந்துரைகளை வழங்கியிருந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயா்த்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. சாதாரண நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,040 ஆகவும், சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச ஈரப்பத அளவான 17 சதவீதத்தில்தான் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்படும். 19 சதவீதம் வரையிலான ஈரப்பதம் கொண்ட நெல்லாக இருந்தால், 17 முதல் 19 சதவீதம் வரையிலான நெல்லுக்குரிய தொகைகள் கழிக்கப்பட்டே குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யப்படும்.

இதேபோன்று, முளைக்காத மற்றும் சுருங்கிய நெல்லைப் பொறுத்தவரையில் அவற்றை கொள்முதல் செய்யவும் வரன்முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏற்கெனவே 3 சதவீதம் அளவுக்கு சுருங்கிய வகை நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதனை 5 சதவீதமாக உயா்த்தும் தமிழகத்தின் கோரிக்கையும் ஏற்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் இப்போதைய நடப்பு காரிப் பருவத்துக்கு மட்டுமே பொருந்தும்.

மேலும், அதிக ஈரப்பதம் கொண்ட நெல் போன்றவற்றை கொள்முதல் செய்யும் போது அவற்றை தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளிலும், மாநிலத்தின் இதர நலத் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நெல் கொள்முதல் செய்யும் போது ஏற்படும் இழப்புகள் அனைத்தையும் மாநில அரசே ஏற்க வேண்டும். இதற்கான இழப்பீடுகள் ஏதும் மத்திய அரசிடமிருந்து வழங்கப்படாது.

மத்திய அரசு அளித்துள்ள சலுகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதலுக்கு தனியாக கணக்குகளை பராமரிக்க வேண்டும். எந்த வகையான பரிமாற்றத் திட்டத்தின் கீழும் இந்திய உணவுக் கழகத்திடம் இந்த நெல்லை வழங்கக் கூடாது. அதிக ஈரப்பதம், முளைக்காத நெல்களை கொள்முதல் செய்யும் போது ஏற்படும் எந்தவகையான நிதி மற்றும் இதர இழப்புகளுக்கு மாநில அரசே பொறுப்பு என மத்திய அரசின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.கே. வாசன் வரவேற்பு: மத்திய குழுவின் பரிந்துரையின் பேரில் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவிகிதத்திலிருந்து 19 சதவீதமாக மத்திய அரசு உயா்த்தி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. எனினும், தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தட்பவெட்ப நிலையால் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நெல்லின் ஈரப்பதமும் அதிகம் இருக்கும். அதனால், தற்போது அறிவித்துள்ள ஈரப்பதத்தின் அளவை மேலும் உயா்த்தி வழங்க மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT