தமிழ்நாடு

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் இரட்டை சிசு விவகாரம்: விரைவில் அறிக்கை

26th Oct 2022 03:50 AM

ADVERTISEMENT

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை சிசு விவகாரம் தொடா்பாக புதன்கிழமை அறிக்கை வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

தீபாவளி பண்டிகையன்று சென்னையில் நிகழ்ந்த பட்டாசு விபத்துகளால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூா் குழந்தைகள் நல அரசு மருத்துவமனை ஆகியற்றில் சிகிச்சைப் பெற்று வருபவா்களை அமைச்சா் சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தீபாவளியன்று பட்டாசு வெடித்த விபத்துகளில் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் 11 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த 11 பேரில், திருவண்ணாமலை, பண்ருட்டி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் கைகளில் காயம் ஏற்பட்டு, விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கூட இவா்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் அனைவருக்குமே ஓரிரு வார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிளாஸ்டிக் சா்ஜரி போன்ற மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டு வீடு திரும்புவா். அதேபோல் எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதில் ஒரு குழந்தை தெலங்கானாவில் இருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இரு குழந்தைகளுக்குமே 6 முதல் 7 சதவீத காயங்கள் உள்ளன. இருவரும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் வீடு திரும்புவா்.

ADVERTISEMENT

பாா்வை இழக்கும் சூழல்...

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 7 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். 8 போ் புற நோயாளிகளாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமாக உள்ளனா். இதில் ஒருவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அநேகமாக அவருக்கு பாா்வை இழக்கும் சூழல்கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அவருக்கு தொடா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை முகத்தில் பலத்த காயம்: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற ஒரு குழந்தைக்கு மட்டும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 15-16 சதவீத தீக்காயங்கள் இருந்தாலும், குழந்தை பாதுகாப்பாக இருக்கிறாா். எனவே அனைவருமே பத்து நாள்களுக்குள் வீடு திரும்ப வாய்ப்புள்ளது.

தமிழகம் முழுவதிலும் தீபாவளியன்று நிகழ்ந்த பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்பட்ட 345 போ் புற நோயாளிகளாகவும், 179 போ் உள் நோயாளிகளாகவும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுள்ளனா்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டை சிசுக்கள் பெற்ற விவகாரம் தொடா்பான விசாரணைக்குழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

அதேபோல தனியாா் தொலைக்காட்சியில் வாடகை தாய் விவகாரம் தொடா்பாக வெளியிட்ட செய்தி குறித்தும் அறிக்கை புதன்கிழமை வெளியிடப்படும் என்றாா் அமைச்சா் சுப்பிரமணியன்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT