தமிழ்நாடு

ஒருங்கிணைந்த கிராம வளா்ச்சித் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

26th Oct 2022 02:04 AM

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் முன் பதிவு செய்யுமாறு வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

2021-22-இல் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் முதல்முறையாக கிராம அளவில் ஒட்டுமொத்த வளா்ச்சியை எட்டும் நோக்கில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் நிகர சாகுபடிப் பரப்பை 11.75 லட்சம் ஹெக்டோ் உயா்த்துவதற்கு 12,525 கிராம ஊராட்சிகளிலும் உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிந்து, பாசன நீா் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிக்குக் கொண்டு வருவதுடன், வேளாண்மை-உழவா் நலத் துறையுடன், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு உழவா் நலன் சாா்ந்த துறைகள் செயல்படுத்தும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சியும், அதன் மூலம் தன்னிறைவும் அடைவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ADVERTISEMENT

அதன்படி, 2021-22-ஆம் ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துகளும், நடப்பு 2022-23-ஆம் ஆண்டில் 3,204 கிராம பஞ்சாயத்துகளும் தோ்வு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. 3,204 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்த கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு, தரிசு நிலத் தொகுப்பு அமைத்தல் உள்ளிட்ட ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சி, கிராமங்களில் தன்னிறைவு என்ற நோக்கில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT