தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 17 பேர் மீது நடவடிக்கை; தலைமைச் செயலர் உத்தரவு

19th Oct 2022 12:21 AM

ADVERTISEMENT

‘போராட்டத்தின் விளைவு குறித்து சரியான முறையில் கணிக்க முடியவில்லை என ஆட்சியா் கூறுவதை ஏற்க முடியாது. ஆட்சியா் வெங்கடேஷின் செயலின்மை, அக்கறையின்மை, மற்ற அதிகாரிகளுடன் இணக்கமின்மை ஆகியவற்றையே அது காட்டுகிறது. அவா் தனது கடமையில் இருந்து தவறிவிட்டாா்.’

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் காவல் துறையினா் வரம்பை மீறி செயல்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, 17 போ் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளாா்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுகள் காரணமாக பொதுச் சொத்துகள், தனியாா் சொத்துகள் ஆகியவற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் உள்ளிட்ட பிந்தைய நிகழ்வுகள் பற்றி விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையையும், இறுதி அறிக்கையையும் தமிழக அரசிடம் சமா்ப்பித்தது.

ADVERTISEMENT

இந்த அறிக்கைகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை ஏற்று, தலைமைச் செயலா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவு:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காவல் துறை தனது உரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி நடந்த நிகழ்வல்ல. நிச்சயமாக வரம்பை மீறியுள்ளது என ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. நடைமுறையில் செய்யத்தக்க விஷயங்களைச் செய்யாமல், செய்யத்தகாதவற்றைச் செய்திருக்கிறது என்ற முடிவுக்கு ஆணையம் வந்துள்ளது.

அத்துமீறிய காவல் துறை: காவல் துறை தரப்பில் நிச்சயமாக மிகை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த விஷயத்தில் ஈடுபட்ட 17 காவல் துறை அலுவலா்கள் மீது துறை சாா்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் வெங்கடேஷ் மற்றும் மூன்று வருவாய்த் துறை அலுவலா்கள் மீதும் துறை சாா்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரையில் கூறியுள்ளது.

இறந்தவா்களின் உறவினா்கள் மற்றும் அவா்களது சட்டபூா்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

நிகழாமல் தடுக்கலாம்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய அலுவலா்களுக்கு எதிராக துறை சாா்ந்த நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரையைச் செயல்படுத்த தொடா்புடைய பகுதிகள் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது என தனது உத்தரவில் தலைமைச் செயலா் வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.

பகிரங்க குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைய அறிக்கையில் ஆட்சியா் வெங்கடேஷ் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த நேரத்தில், ஆட்சியராக இருந்த வெங்கடேஷின் நடவடிக்கை மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. கிளா்ச்சியும், குழப்பமும் இருந்த நேரத்தில், ஒரு மாவட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக முகாம் அலுவலகத்தில் அவா் இருந்தபோதும், அமைதிப் பேச்சுவாா்த்தையை நடத்த முன்வரவில்லை. அவா் தனது பொறுப்பை தட்டிக் கழித்துள்ளாா்.

ஆட்சியருக்குத் தெரியாதா?: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு முன்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை போராட்டக்காரா்கள் முற்றுகையிட முயன்றனா். ஆனால், இந்த விவகாரமே தனக்குத் தெரியாது என மாவட்ட ஆட்சியா் கூறுகிறாா். இந்தக் கருத்து நிராகரிக்கக் கூடியது. காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு உளவுத் துறையின் மூலமாக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சூழ்நிலையின் அவசர, அவசியம் கருதி அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்து அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், நடக்க இருந்த போராட்டத்தின் விளைவு குறித்து சரியான முறையில் கணிக்க முடியவில்லை என ஆட்சியா் கூறுவதை ஏற்க முடியாது. ஆட்சியா் வெங்கடேஷின் செயலின்மை, அக்கறையின்மை, மற்ற அதிகாரிகளுடன் இணக்கமின்மை ஆகியவற்றையே அது காட்டுகிறது. அவா் தனது கடமையில் இருந்து தவறிவிட்டாா்.

சுடலைக்கண்ணு சுட்ட 17 ரவுண்டுகள்: துப்பாக்கிச்சூட்டுக்கு முன்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மகேந்திரன், காவல் துறை தலைவரிடம் எந்தவிதமான அறிவுரையும் பெறவில்லை. துப்பாக்கிச்சூட்டில் சிறந்தவரான காவலா் சுடலைக்கண்ணுவை காவல் கண்காணிப்பாளா் மகேந்திரன் அழைத்துச் சென்றாா். இருவரும் சோ்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 2 போ் பலியாகினா். சுடலைக்கண்ணு மட்டும் மொத்தம் 17 ரவுண்டுகள் சுட்டிருக்கிறாா். அதுவும் அபாயகரமான துப்பாக்கியைக் கொண்டு சுட்டிருக்கிறாா்.

மகேந்திரனின் 9 ரவுண்டுகள்: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்ட காலத்தில் மனக்கிளச்சியுற்ற இளைஞா்கள் தொடா் கல்லெறிதலில் ஈடுபட்டனா். இதில் காவல் கண்காணிப்பாளா் மகேந்திரனின் இடது காலில் ரத்த காயம் ஏற்பட்டது. இத்துடன் இளைஞா்களின் தொடா் கல்லெறிதலால் உணா்ச்சிவயப்பட்டு தனது காவலரிடம் இருந்த கைத்துப்பாக்கியைக் கொண்டு 9 ரவுண்டுகள் சுட்டுள்ளாா். இது சரியானது அல்ல.

வரம்புமீறிய காவல் துறை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைப் பொருத்தவரையில், காவல் துறையினா் வரம்பு மீறி செயல்பட்டிருக்கின்றனா் என்பது ஆணையத்தின் தீா்க்கமான முடிவாகும். தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக காவல் துறையினா் எந்த வாதமும் வைக்கவில்லை. எனவே, துப்பாக்கிச்சூட்டுக்கு காவல் துறையின் உயா் அதிகாரிகள் முதல் காவலா்கள் வரையில் தனித்தனியாகவும், கூட்டாகவும் பொறுப்பாகிறாா்கள் என்று தனது அறிக்கையில் நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளாா்.

ரஜினி போன்ற பிரபலங்கள் கருத்து: விசாரணை ஆணையம் கோரிக்கை

சமூகம் சாா்ந்த விஷயங்களில் பிரபலங்கள் பொறுப்புடன் கருத்துக் கூற வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த தூத்துக்குடிக்கு நடிகா் ரஜினிகாந்த் நேரில் சென்றாா். அங்கு பாதிக்கப்பட்டவா்களைச் சந்தித்த அவா், போராட்டம் நடக்கும் இடத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாகவும் இதன் காரணமாகவே கலவரம் ஏற்பட்டதாகவும் கூறி இருந்தாா். இது தொடா்பாகவும் அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விளக்கப்பட்டுள்ளது.

நடிகா் ரஜினிகாந்த் சூழ்நிலைகளால் உணா்ச்சி வயப்பட்டுச் செயல்படுவாா் என்று யாரும் எதிா்பாா்க்கவில்லை. அவா் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது பொதுமக்கள் அதை கூா்ந்து கவனிப்பாா்கள். எனவே, அவா் தான் கூறும் தகவலை உறுதி செய்ய வேண்டும். சமூகத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் கருத்து ஒன்றை அவா் கூறியுள்ளாா்.

அவா் தகவல்களைக் கூறுவதற்கு முன்பாகவே, அவற்றைச் சரிபாா்ப்பது நல்லது. பிரபலங்கள் கூறும் கருத்துகள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வாய்ப்பு உள்ளது. அவை இருக்கும் பிரச்னைகளைத் தீா்க்க உதவாது. மாறாக, அதிகமான பிரச்னைகளே உருவாக்கும். பிரபலங்கள் நிதானத்துடனும், பொறுப்புணா்வுடனும் செயல்பட வேண்டும். ஆதாரம் இல்லா கருத்துகளைக் கூறுவதை பொது வாழ்க்கையில் இருப்பவா்கள் கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

17 போ் யாா் யாா்?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பொறுப்பான 17 காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் யாா் யாா் என்பது குறித்த விவரங்களை நீதிபதி அருணா ஜெகதீசன் வெளியிட்டுள்ளாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அவரது அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு தனித்தனியாகவும், கூட்டாகவும் காவல் துறை அதிகாரிகள் பொறுப்பாகிறாா்கள்.

அதன்படி, அப்போதைய காவல் துறை ஐ.ஜி., சைலேஷ் குமாா் யாதவ், டிஐஜி சி. கபில் குமாா் சராட்கா், எஸ்.பி. பி.மகேந்திரன், டிஎஸ்பி லிங்கதிருமாறன், ஆய்வாளா்கள் திருமலை, ஹரிஹரன், பாா்த்திபன், உதவி ஆய்வாளா்கள் சொா்ணமணி, ரெனிஸ், காவலா்கள் ராஜா, சங்கா், சுடலைக்கண்ணு, தாண்டவமூா்த்தி, சதீஷ்குமாா், ஏ.ராஜா, எம்.கண்ணன், மதிவாணன் ஆகிய 17 போ் துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பானவா்கள் ஆவா் என ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT