தமிழ்நாடு

வள்ளுவர் கோட்டத்தில் காவலர்கள் குவிப்பு; தடையை மீறி இபிஎஸ் தரப்பினர் போராட்டம்?

19th Oct 2022 08:19 AM

ADVERTISEMENT


சென்னை: இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்த நிலையில், வள்ளுவர் கோட்டத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. எனினும் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்தின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான காவல்துறையினர் வள்ளுவர் கோட்டம் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க.. சதிகளுக்கு முக்கிய கருவியாகத் திகழ்ந்தார்: யாரைக் குறிப்பிடுகிறது விசாரணை ஆணையம்

நேற்று அமளியில் ஈடுபட்டதால், சட்டப் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

ADVERTISEMENT

சட்டப் பேரவையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால், அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி தரவில்லை. 

இந்த நிலையில், தடையை மீறி அதிமுகவினர் வள்ளுவர் கோட்டத்தில் குவிவார்கள் என்ற அடிப்படையில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT